தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தோனி 'பேட்டிங்' அதிசயம்

தோனி 'பேட்டிங்' அதிசயம்

தோனி 'பேட்டிங்' அதிசயம்


UPDATED : ஏப் 01, 2024 11:07 PM

ADDED : ஏப் 01, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2024 11:07 PM ADDED : ஏப் 01, 2024 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டனம்: தோனியின் விளாசலை பார்த்த ரசிகர்கள் தங்களையே மறந்து போயினர். ஒற்றை கையால் அவர் அடித்த சிக்சர் அனைவரது கண்களிலும் நிழலாடுகிறது. வரும் போட்டிகளில் முன்னதாக களமிறங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

விசாகப்பட்டனத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லியிடம்(191/5), சென்னை அணி (171/6) தோல்வி அடைந்தது. சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா நல்ல 'ஓபனிங்' தர தவறினார். 12 பந்தில் 2 ரன்னுக்கு(ஸ்டிரைக் ரேட் 16.66) அவுட்டானார். 6 விக்கெட் இழந்த நிலையில், கடைசி 23 பந்தில் 73 ரன் தேவை என்ற தருணத்தில் 'தல' தோனி களமிறங்கினார். முழங்கால் ஆப்பரேஷனுக்கு பிறகு 307 நாள் பேட்டிங் செய்யாத இவர், சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். கலீல் அகமது பந்தை சிக்சருக்கு அனுப்ப, நம்பிக்கை துளிர்விட்டது. தோனி களத்தில் இருக்கும் வரை எந்த இலக்கும் சாத்தியம் என ரசிகர்கள் நம்பினர். 19வது ஓவரை முகேஷ் குமார் கச்சிதமாக வீச, டில்லி பக்கம் ஆட்டம் மாறியது.

ஒரே ஓவரில் 20 ரன்

கடைசி ஓவரில் 41 ரன் தேவை என்ற எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. நார்ட்ஜே பந்துவீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் தோனி. அடுத்த பந்தில் ஒற்றை கையால் சிக்சர் விளாசினார். இன்னும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஒரே ஓவரில் 20 ரன் எடுத்தார். 42 வயதானாலும் இவரது 'ஸ்டைல்' மாறவில்லை. 8வது இடத்தில் களமிறங்கிய தோனி, 16 பந்தில் 37 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, 'பினிஷராக' ஜொலித்தார். 'எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியம் அல்ல. ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதே என் இலக்கு,'' என 2014ல் தோனி கூறினார். இதற்கு ஏற்ப ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை அணியின் தோல்வியை மறந்து தோனியின் ஆட்டத்தை கொண்டாடினர்.

ரன் ரேட் முக்கியம்

சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''காயத்தில் இருந்து மீண்டு வந்த தோனி, அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடினமான நாளில் 'பாசிட்டிவ்' உணர்வை தந்தார். கடைசி ஓவரில் 20 ரன் எடுத்து, அணியின் 'நெட் ரன் ரேட்'டிற்கு கைகொடுத்தார்,''என்றார்.

சிறந்த 'பினிஷர்'

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,''பேட்டிங் வரிசையில் தோனி முன்னதாக களமிறங்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர் துவக்க வீரராக வர வேண்டுமென முன்பு வலியுறுத்தியிருக்கிறோம். இப்போது காலம் கடந்துவிட்டது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அணிக்கு தேவை என்றால் மட்டும் முன்னதாக வரலாம். நான் பார்த்த வீரர்களில் தோனி தான் சிறந்த 'பினிஷர்'. இந்த பணியில் தொடரலாம்,''என்றார்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,''தோனி முன்னதாக களமிறங்குவதே நல்லது. டில்லிக்கு எதிராக சிறப்பாக பேட் செய்தார். இவர் முன்னதாக வருவதையே ரசிகர்களும் விரும்புவர்,''என்றார்.

5000 ரன்

டில்லிக்கு எதிராக அசத்திய தோனி, ஐ.பி.எல்., அரங்கில் 5000 ரன்(247 போட்டி) எடுத்த முதல் விக்கெட் கீப்பர் பேட்டரானார். அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் (4233 ரன், 227 போட்டி) உள்ளார்.



7000 ரன்

'டி-20' அரங்கில் 7000 ரன்னை எட்டிய முதல் ஆசிய விக்கெட் கீப்பர் பேட்டரானார் தோனி. அடுத்த இரு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (6962), கம்ரான் அக்மல் (6454) உள்ளனர்.

100 சிக்சர்

ஐ.பி.எல்., வரலாற்றில் 19, 20வது ஓவரில் மட்டும் 100 சிக்சர் விளாசிய முதல் வீரரானார் தோனி. அடுத்த இடத்தில் போலார்டு (57 சிக்சர்) உள்ளார்.

ஒன்பது முறை

ஐ.பி.எல்., அரங்கில் ஒரு போட்டியின் கடைசி ஓவரில் அதிக முறை 20 அல்லது அதற்கு மேல் ரன் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் தோனி(9 முறை). அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா (8), ரிஷாப் பன்ட் (6) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us