ADDED : ஜூன் 26, 2026 11:13 PM

காலே: கேப்டன் துருவ் ஜுரெல் சதம் விளாச, இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 452 ரன் குவித்தது.
இலங்கை சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி 333/4 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரெல் (68), ரஷீத் (53) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஐந்தாவது விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்த போது ஷேக் ரஷீத் (63) அவுட்டானார். அபாரமாக ஆடிய துருவ் ஜுரெல் சதம் கடந்தார். ஹர்ஷ் துபே (30) ஓரளவு கைகொடுத்தார். இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 452 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஜுரெல் (141 ரன், 1X6, 13X4) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை 'ஏ' அணி, ஆட்டநேர முடிவில் 113/2 ரன் எடுத்து, 339 ரன் பின்தங்கி இருந்தது. நுவனிது பெர்னாண்டே (65), அஷேன் பண்டாரா (18) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாகூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
