ADDED : ஏப் 26, 2025 12:13 AM

மும்பை: 'ஹிட்மேன் இஸ் பேக்' என ரோகித் சர்மா ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். 'பார்மை' மீட்ட இவர், அடுத்தடுத்து அரைசதம் விளாசி, மும்பை அணியின் நட்சத்திரமாக மீண்டும் ஜொலிக்கிறார்.
பிரிமியர் அரங்கில் மும்பை அணிக்கு 5 கோப்பை வென்று தந்தவர் ரோகித் சர்மா 37. கடந்த ஆண்டு இவருக்கு பதில் ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் உள்ளூர் ரசிகர்கள் கோபமடைந்தனர். அணியிலும் சலசலப்பு ஏற்பட, மும்பை அணி கடைசி 10வது இடம் பிடித்தது.
இம்முறை ரோகித் சர்மா துவக்கத்தில் தடுமாறினார். சென்னைக்கு எதிரான  முதல் போட்டியில் (சேப்பாக்கம்) 'டக்' அவுட்டானார். முதல் 6 போட்டிகளில் 82 ரன் (சராசரி 13.67) தான் எடுத்திருந்தார். பின் அதே சென்னைக்கு எதிராக (மும்பை வான்கடே மைதானம்) 76 ரன் விளாசி 'பார்மிற்கு' திரும்பினார். அடுத்து ஐதராபாத்திற்கு எதிராகவும் 70 ரன் (46 பந்து, 8x4, 3x6)  விளாசினார்.
தொடர்ந்து இரு அரைசதம் விளாசிய ரோகித், 8 போட்டிகளில் 228 ரன் (சராசரி 32.57, ஸ்டிரைக் ரேட் 154.05) எடுத்து மும்பை சார்பில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். மும்பை அணி தொடர்ந்து நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இது குறித்து தென் ஆப்ரிக்க முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஷான் போலக் கூறுகையில்,''மிகவும் 'கூலாக' விளையாடிய ரோகித் சர்மா, இழந்த 'பார்மை' மீட்டுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பின் பிரிமியர் அரங்கில் முதல் முறையாக தொடர்ந்து இரு அரைசதம் விளாசியுள்ளார். சரியான நேரத்தில் எழுச்சி கண்டு, மும்பை அணிக்கு கைகொடுத்துள்ளார். ரிக்கிள்டன் உடன் சேர்ந்து வலுவான துவக்கம் தருகிறார். இவரது சிறப்பாக 'பார்ம்' தொடர்ந்தால், மும்பை அணி சாதிக்க அதிக வாய்ப்பு உண்டு,''என்றார்.
ரோகிக் கூறுகையில்,''சக வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மும்பை அணியின் சிறப்பான ஆட்டம் தொடர விரும்புகிறேன்,''என்றார்.

