மதுரைக்கு நான்காவது வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது
மதுரைக்கு நான்காவது வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது
UPDATED : ஆக 13, 2026 12:00 AM
ADDED : ஆக 12, 2026 11:08 PM

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய மதுரை அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது.
திண்டுக்கல், நத்தத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதின. மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. தலா 18 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.
மதுரை அணிக்கு ராம் அரவிந்த், சித்தார்த் மகாதேவன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. புவனேஸ்வரன் வீசிய முதல் ஓவரில் 3 சிக்சர் விளாசிய ராம் அரவிந்த், கிஷோர் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது சந்தீப் வாரியர் 'வேகத்தில்' ராம் அரவிந்த் (40 ரன், 4X6, 3X4) வெளியேறினார். சித்தார்த் (22) ஓரளவு கைகொடுத்தார்.
கேப்டன் பாலசந்தர் அனிருத் (5) ஏமாற்றினார். பின் இணைந்த சதுர்வேத், அதீக் உர் ரஹ்மான் ஜோடி நம்பிக்கை தந்தது. கிஷோர் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் சதுர்வேத். நிராங்கர் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பினார் அதீக். நான்காவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது சதுர்வேத் (42) அவுட்டானார். அதீக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தீப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த குர்ஜப்னீத் சிங், விஜு அருள் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். சரவணன் (12), ராஜலிங்கம் (1) 'ரன்-அவுட்' ஆகினர்.
மதுரை அணி 18 ஓவரில் 171/7 ரன் எடுத்தது. குர்ஜப்னீத் (13) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் சந்தீப் வாரியர், விஜு அருள் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் (40), வினீத் (28) ஜோடி கைகொடுத்தது. கேப்டன் பாபா இந்திரஜித் (8) சோபிக்கவில்லை. ஹன்னி சைனி (20), விமல் குமார் (17) ஆறுதல் தந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 31 ரன் தேவைப்பட்டன. ராஜலிங்கம் பந்துவீசினார். இரண்டாவது பந்தில் ஜெயந்த் (4) அவுட்டானார்.
திண்டுக்கல் அணி 18 ஓவரில் 150/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மோகித் மிட்டன் (17), புவனேஸ்வரன் (7) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை அணி சார்பில் ரோஹன் 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஏற்கனவே திருச்சி, கோவை, சேலம் அணிகளை வீழ்த்திய மதுரை அணி, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. கடந்த இரு போட்டியில் நெல்லை, சேப்பாக்கம் அணிகளிடம் வீழ்ந்த திண்டுக்கல் அணி 'ஹாட்ரிக்' தோல்வியை பெற்றது.
