/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பூம்பால்' வீரர் தெரியுமா: வியக்கும் அஷ்வின்
/
'பூம்பால்' வீரர் தெரியுமா: வியக்கும் அஷ்வின்
ADDED : பிப் 11, 2024 10:11 PM

சென்னை: ''இரண்டாவது டெஸ்டில் பும்ராவின் பந்துவீச்சு வியக்க வைத்தது,'' என அஷ்வின் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்துகிறார் பும்...பும் பும்ரா. முதல் இரண்டு டெஸ்டில் 15 விக்கெட் கைப்பற்றினார். இதில் விசாகப்பட்டனத்ததில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இவர், வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்தின் அதிரடியாக பேட் செய்யும் 'பாஸ் பால்' திட்டத்தை தனது துல்லிய 'யார்க்கர்'களால் தகர்த்தார். இவரது கலக்கல் பந்துவீச்சு வரும் 15ல் ராஜ்கோட்டில் துவங்கும் மூன்றாவது டெஸ்டிலும் தொடரலாம். இப்போட்டியில் இந்திய 'சுழல்' நாயகன் அஷ்வின் ஒரு விக்கெட் சாய்த்தால், டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டலாம்.
இம்மகிழ்ச்சியில் உள்ள அஷ்வின் கூறியது: பும்ராவின் ரசிகன் நான். விசாகப்பட்டனம் டெஸ்டில் அனைவரையும் கவர்ந்தார் 'ரிவர்ஸ் ஸ்விங்', 'யார்க்கர்'கள் மூலம் முதல் இன்னிங்சில் 6, இரண்டாவது இன்னிங்சில் 3 என 9 விக்கெட் சாய்த்தார். மொத்தத்தில் 'பூம்பால்' பும்ரா தான் வெற்றி நாயகனாக ஜொலித்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 'டி-20' என மூன்றுவித கிரிக்கெட்டிலும் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் என்ற இமாலய சாதனை படைத்திருக்கிறார்.
இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு 'மெட்ரோ' நகரங்களில் தேர்வு செய்யப்படவில்லை. ஐதராபாத், விசாகப்பட்டனம், ராஜ்கோட், ராஞ்சி, தர்மசாலா மைதானங்களில் நடக்கின்றன. இங்கு பெரும்பாலான இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்க மாட்டார்கள். இதனால் சொந்த மண்ணில், பழகிய மைதானங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு அஷ்வின் கூறினார்.