ADDED : ஏப் 30, 2026 10:25 PM

புதுடில்லி: ராஜஸ்தானின் 'பயமறியா' வைபவ் சூர்யவன்ஷி, 15, பட்டையை கிளப்புகிறார். கிரிக்கெட் லீக் தொடரில், 9 போட்டியில் 400 ரன் (168 பந்து, சராசரி 44.44, 'ஸ்டிரைக் ரேட்' 238.09) குவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் கூறுகையில்,''வைபவ் ஒரு சின்ன குழந்தை. ஆனால், அவர் அடிக்கும் 'ஷாட்'கள் வியக்க வைக்கின்றன. பும்ரா, அர்ஷ்தீப் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடுகிறார். திறமைக்கு வயது தடை அல்ல. இந்திய சீனியர் அணியில் இவருக்கு வாய்ப்பு தேடி வரும்.
ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அனுபவம் வாய்ந்த கோலி, ரோகித் எதையும் சமாளித்துவிடுவர். 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இடம் பெறுவர்.
ஓய்வுக்கு பின் கோல்ப் விளையாடுவது, புல்லாங்குழல் வாசிப்பது என பொழுதை இனிமையாக கழிக்கிறேன். கிரிக்கெட் லீக் தொடரில் பயிற்சியாளராக பணியாற்ற தயாராக உள்ளேன்,''என்றார்.
'ஸ்பின்னர்' ரகசியம் என்ன
மும்பை: இலங்கை 'சுழல்' ஜாம்பவான் முரளிதரன் கூறுகையில்,''கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் 'ஸ்பின்னர்'கள் பந்தை சுழற்றுவதில்லை. இந்த கலையை 10-12 வயதில் படிக்க வேண்டும். 18-19 வயதில் கற்றுக் கொள்வது கடினம். பந்துளை சுழற்றி வீசும் போது தான் பேட்டர்களுக்கு தொல்லை கொடுக்க முடியும். தற்போதும் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. பேட்டர்-பவுலர் என இருவருக்கும் ஏற்றதாக அமைத்தால், ரசிகர்களுக்கு 'போர்' அடித்துவிடும். அவர்கள் பவுண்டரி, சிக்சர்களை காணவே விரும்புகின்றனர். ஸ்பான்சர்கள், வர்த்தகம், பொழுதுபோக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்,''என்றார்.
