/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டிராவிட் பயிற்சி: வைபவ் மகிழ்ச்சி
/
டிராவிட் பயிற்சி: வைபவ் மகிழ்ச்சி
ADDED : டிச 12, 2024 10:49 PM

புதுடில்லி: ''டிராவிட் பயிற்சியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி,'' என, வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 13. பீகாரை சேர்ந்த இவரை, சமீபத்திய ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் முடிந்த ஜூனியர் (19 வயது) ஆசிய கோப்பையில் விளையாடிய இவர், 5 போட்டியில், 2 அரைசதம் உட்பட 176 ரன் (12 சிக்சர், 14 பவுண்டரி) குவித்தார். இதுவரை 5 முதல் தரம், ஒரு 'டி-20' போட்டியில் பங்கேற்றுள்ள இவர், ஐ.பி.எல்., தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாட உள்ளார்.
இதுகுறித்து வைபவ் சூர்யவன்ஷி கூறியது: ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணியில் இணைந்ததில் மகிழ்ச்சி. இத்தொடரில் விளையாடுவதை விட, ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பங்கேற்க இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல்., போட்டிக்காக எவ்வித வியூகமும் கிடையாது. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
ஆசிய கோப்பை (19 வயது) தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மோசம் என்று கூற முடியாது. பைனலில் பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்தோம். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்.
பீகார் கிரிக்கெட் சங்க உதவியால் தான் என்னால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது. இதற்காக அதன் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்காக சீனியர் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.
இவ்வாரு வைபவ் கூறினார்.

