இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: இரண்டாவது 'டி-20' போட்டியில்
இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: இரண்டாவது 'டி-20' போட்டியில்
ADDED : ஜூலை 05, 2026 12:29 AM

மான்செஸ்டர்: இரண்டாவது 'டி-20' போட்டியில் பவுலர்கள் ஏமாற்ற, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்காக இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. இங்கிலாந்து சென்றுள்ள 'உலக சாம்பியன்' இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, மழையால் பாதியில் ரத்தானது. மான்செஸ்டரின், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு 'ரெஸ்ட்' அளிக்கப்பட்டு, இளம் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங் அறிமுக வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வைபவ் 'சிக்சர்': இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி நல்ல துவக்கம் தந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் '03' என்ற எண் பொறித்த 'ஜெர்சி' அணிந்து களமிறங்கினார் வைபவ். ஜோஷ் டங் வீசிய முதல் பந்தை (1.1) சந்தித்தார். ரன் எடுக்க முடியவில்லை. ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை (2.1) சிக்சருக்கு அனுப்பி, தனது சர்வதேச கிரிக்கெட் வருகையை அதிரடியாக உணர்த்தினார். ஜோஷ் டங் பந்தில் இன்னொரு இமாலய சிக்சர் விளாசினார். இதே ஓவரில் (4வது) அபிஷேக் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 20 ரன் கிடைத்தன.
10 பந்தில் 14 ரன்: இந்த சமயத்தில் 'ஸ்பின்னர்' வில் ஜாக்ஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட வைபவ் (14 ரன், 10 பந்து, 2X6), பட்லரின் துடிப்பான 'ஸ்டம்பிங்'கில் அவுட்டானார். அபிஷேக் சர்மா, 43 ரன் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 37 ரன்னுக்கு வெளியேறினார். ஷிவம் துபே (5) ஏமாற்றினார். இஷான் கிஷான் (49) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அக்சர் படேல் (3) ரன் அவுட்டானார். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் திலக் வர்மா 6,6,4 என விளாச, மொத்தம் 17 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 20 ஓவரில் 190/7 ரன் குவித்தது. திலக் வர்மா (24) அவுட்டாகாமல் இருந்தார்.
அர்ஷ்தீப் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் அதிர்ந்தது. முதல் பந்தில் பில் சால்ட் (0), 5வது பந்தில் பட்லர் (0) அவுட்டாகினர். பின் அர்ஷ்தீப் ஓவரில் (3வது) கேப்டன் ஹாரி புரூக் 4,4,6,6,6 விளாச, மொத்தம் 27 ரன் எடுக்கப்பட்டன. அக்சர் சுழலில் புரூக்(39) வெளியேற நிம்மதி ஏற்பட்டது. டாம் பான்டன், 39 ரன் எடுத்தார். வில் ஜாக்ஸ் (9) நிலைக்கவில்லை.
பெத்தல் அரைசதம்: பிஷ்னோய் (17வது) ஓவரில் ஜேக்கப் பெத்தல் 6,6,4,6, என பதம் பார்க்க, மொத்தம் 29 ரன் கிடைத்தன. 39 பந்தில் அரைசதம் கடந்த பெத்தல், போட்டியின் போக்கை மாற்றினார். சாம் கர்ரான் (7) தாக்குப்பிடிக்கவில்லை. இங்கிலாந்து அணி 19 ஓவரில் 191/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெத்தல் (76), ஆர்ச்சர் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபிஷேக் '200'
இந்திய அணிக்காக நேற்று அபிஷேக் சர்மா, 50வது 'டி-20' போட்டியில் (1589 ரன்) பங்கேற்றார் இது, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் இவரது 200வது போட்டியாக (5955 ரன்) அமைந்தது.
அக்சர் படேல் '100'
ஹாரி புரூக்கை அவுட்டாக்கிய அக்சர் படேல், சர்வதேச டி-20 போட்டியில் 100வது விக்கெட்டை (98 போட்டி) பெற்ற முதல் இந்திய 'ஸ்பின்னர்' ஆனார். அர்ஷ்தீப் சிங்(134 விக்கெட்), பும்ரா (121), ஹர்திக் பாண்ட்யாவுக்கு (114) பிறகு இம்மைல்கல்லை எட்டிய 4வது இந்திய பவுலரானார்.
