/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி திணறல்: ஜேக்கப் பெத்தெல் சதம்
/
இங்கிலாந்து அணி திணறல்: ஜேக்கப் பெத்தெல் சதம்
ADDED : ஜன 07, 2026 10:44 PM

சிட்னி: ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 518/7 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (129), வெப்ஸ்டர் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் வெப்ஸ்டர் அரைசதம் கடந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது கேப்டன் ஸ்மித் (138) அவுட்டானார். ஸ்டார்க் (5), போலண்ட் (0) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 567 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெப்ஸ்டர் (71) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
ரூட் ஏமாற்றம்: பின், 183 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (1) ஏமாற்றினார். பென் டக்கெட் (42) ஓரளவு கைகொடுத்தார். ஜோ ரூட் (6) சோபிக்கவில்லை. ஹாரி புரூக் (42) ஆறுதல் தந்தார். வெப்ஸ்டர் பந்தில் வில் ஜாக்ஸ் (0), கேப்டன் ஸ்டோக்ஸ் (1) அவுட்டாகினர். ஜேமி ஸ்மித் (26) 'ரன்-அவுட்' ஆனார். பிரைடன் கார்ஸ் (16) நிலைக்கவில்லை.
விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜேக்கப் பெத்தெல், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 302/8 ரன் எடுத்து, 119 ரன் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. பெத்தெல் (142) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் வெப்ஸ்டர் 3, போலண்ட் 2 விக்கெட் சாய்த்தனர்.
கடைசி நாளில் இங்கிலாந்தை விரைவில் ஆல் அவுட் செய்து, ஆஸ்திரேலியா வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

