/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'நெருப்பா' பும்ரா...சிறப்பா சிராஜ்: இந்திய அணி ஆதிக்கம்
/
'நெருப்பா' பும்ரா...சிறப்பா சிராஜ்: இந்திய அணி ஆதிக்கம்
'நெருப்பா' பும்ரா...சிறப்பா சிராஜ்: இந்திய அணி ஆதிக்கம்
'நெருப்பா' பும்ரா...சிறப்பா சிராஜ்: இந்திய அணி ஆதிக்கம்
ADDED : அக் 02, 2025 11:28 PM

ஆமதாபாத்: முதல் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. பந்துவீச்சில் சிராஜ், பும்ரா மிரட்டினர். பேட்டிங்கில் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். ஆமாதாபாத் மோடி மைதானத்தில் துவங்கிய முதல் டெஸ்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ராஸ்டன் சேஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் சரிவு: சிராஜ், பும்ரா 'வேகத்தில்' வெஸ்ட் இண்டீசின் 'டாப்-ஆர்டர்' தகர்ந்தது. சிராஜ் பந்தில் ஜாம்பவான் ஷிவநரைன் சந்தர்பால் மகன் டேகநரைன் சந்தர்பால் (0) அவுட்டானார். பும்ரா 'புயலில்' ஜான் கேம்பல் (8) சிக்கினார். தொடர்ந்து மிரட்டிய சிராஜ் 'வேகத்தில்' பிரண்டன் கிங் (13), அதனாசே (12) நடையை கட்டினர். குல்தீப் 'சுழலில்' ஷாய் ஹோப் (26) போல்டாக, உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் 90/5 ரன் எடுத்து தவித்தது.
கிரிவ்ஸ் ஆறுதல்: பின் ராஸ்டன் சேசை (24) வெளியேற்றிய சிராஜ், தனது 4வது விக்கெட்டை பெற்றார். வாஷிங்டன் சுந்தர் வலையில் பியர்ரி (11) அவுட்டானார். தனிநபராக போராடிய ஜஸ்டின் கிரிவ்ஸ் (32), பும்ரா 'யார்க்கரில்' போல்டானார். இவரது இன்னொரு துல்லிய 'யார்க்கரில்' ஜோஹன் லெய்ன் (1) போல்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா சார்பில் சிராஜ் 4, பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ராகுல் அரைசதம்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தந்தனர். இந்திய அணி 23/0 ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. 20 நிமிடத்திற்கு பின் ஆட்டம் துவங்கியது. கிரிவ்ஸ் ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் சீல்ஸ் ஓவரில் ராகுல் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த நிலையில், சீல்ஸ் பந்தில் ஜெய்ஸ்வால் (36) வெளியேறினார். தமிழக வீரர் சாய் சுதர்சன் (7), சேஸ் 'சுழலில்' எல்.பி.டபிள்யு., ஆனார். இந்தியா 91/2 ரன் எடுத்தது. அசராமல் ஆடிய ராகுல், டெஸ்ட் அரங்கில் 20வது அரைசதம் எட்டினார். முதல் நாள்
ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 38 ஓவரில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் மட்டும் பின்தங்கியிருந்தது. ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
கைவசம் 8 விக்கெட் இருக்கும் நிலையில், இன்று இந்திய பேட்டர்கள் அசத்தினால், வலுவான ஸ்கோரை எட்டலாம்.
44.1 ஓவர்
இந்திய மண்ணில் ஒரு டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் குறைந்த ஓவரில் (44.1) ஆல் அவுட்டான 2வது அணியானது வெஸ்ட் இண்டீஸ். இதற்கு முன் வங்கதேசம் 30.3 ஓவரில் (ஈடன் கார்டன், கோல்கட்டா, 2019) சுருண்டது.
* கடந்த இங்கிலாந்து தொடரில் 5, நேற்றும் சேர்த்து இந்திய கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 6 டெஸ்டில் 'டாஸ்' வெல்ல தவறினார்.
அதிவேக 50 விக்.,
ஜோஹன் லெய்னை போல்டாக்கிய பும்ரா, சொந்த மண்ணில் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டை (1747 பந்து) வீழ்த்திய இந்திய பவுலரானார். அடுத்த இடத்தில் ஷமி (2267), ஹர்பஜன் (2272) உள்ளனர்.
* இன்னிங்ஸ் அடிப்படையில், சொந்த மண்ணில் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை ஸ்ரீநாத் உடன் பகிர்ந்து கொண்டார் பும்ரா. இருவரும் 24 இன்னிங்சில் எட்டினர். அடுத்த இடத்தில் கபில்தேவ் (25) உள்ளார்.
2வது முறை
ஆமதாபாத்தில் அசத்திய சிராஜ், சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் 2வது முறையாக நான்கு விக்கெட் சாய்த்தார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக (4/84, ராஜ்கோட், 2024) அசத்தினார்.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவரில் சிராஜ் முதலிடத்திற்கு (7 டெஸ்ட், 31 விக்கெட்) முன்னேறினார்.
ஆடுகளம் அருமை
சிராஜ் கூறுகையில்,''ஆமதாபாத் ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டதால், வேகத்துக்கு கைகொடுத்தது. இத்தகைய ஆடுகளங்கள் இந்தியாவில் அமைக்கப்படுவது அரிது. இதனால் மகிழ்ச்சியாக பந்துவீசினேன். கடின உழைப்பின் காரணமாக 4 விக்கெட் கிடைத்தது,''என்றார்.