ராஜஸ்தான் அணிக்கு முதல் அதிர்ச்சி: பேட்டிங் சரிந்ததால் ஏமாற்றம்
ராஜஸ்தான் அணிக்கு முதல் அதிர்ச்சி: பேட்டிங் சரிந்ததால் ஏமாற்றம்
ADDED : ஏப் 13, 2026 11:41 PM

ஐதராபாத்: பேட்டிங்கில் சரிந்த ராஜஸ்தான் அணி, 57 ரன் வித்தியாசத்தில் முதல் தோல்வியை பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இஷான் விளாசல்: ஐதராபாத் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 'டக்-அவுட்' ஆனார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய கேப்டன் இஷான் கிஷான், பர்கர், சந்தீப் சர்மா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். டிராவிஸ் ஹெட் (18) நிலைக்கவில்லை.சந்தீப், ரவி பிஷ்னோய் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட இஷான் கிஷான், 30 பந்தில் அரைசதம் கடந்தார். சந்தீப் சர்மா பந்தில் இஷான் கிஷான் (91 ரன், 44 பந்து, 6X6, 8X4) அவுட்டானார். கிளாசன் (40), நிதிஷ் குமார் ரெட்டி (28) ஓரளவு கைகொடுத்தனர்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன் எடுத்தது. அரோரா (24) அவுட்டாகாமல் இருந்தார்.
ஹிங்கே மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, நாக்பூரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பிரபுல் ஹிங்கே தொல்லை தந்தார். இவர் வீசிய முதல் ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி (0), துருவ் ஜுரெல் (0), லுவான்-டிரி பிரிட்டோரியஸ் (0) அவுட்டாகினர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (1) சோபிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய ஹிங்கே 'வேகத்தில்' கேப்டன் ரியான் பராக் (4) வெளியேறினார். ராஜஸ்தான் அணி 9 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து திணறியது.
பின் இணைந்த ரவிந்திர ஜடேஜா, டோனோவன் பெரெய்ரா ஜோடி ஆறுதல் தந்தது. சாகிப் ஹுசைன் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஜடேஜா. ஹிங்கே, ஷிவாங் குமார் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த பெரெய்னா, ஹர்ஷ் துபே பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 31 பந்தில் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்த போது சாகிப் ஹுசைன் பந்தில் பெரெய்ரா (69) அவுட்டானார். ஈஷான் மலிங்கா பந்தில் ஜடேஜா (45) சரணடைந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் (2), ரவி பிஷ்னோய் (0), பர்கர் (2) ஏமாற்றினர். தேஷ்பாண்டே (25) ஆறுதல் தந்தார்.
ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பர்கர் (3) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் ஹிங்கே, சாகிப் ஹுசைன் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
'டக்-அவுட்' பரிதாபம்
இந்த ஆண்டு அபிஷேக் சர்மா விளையாடிய 18 'டி-20' போட்டியில், 7வது முறையாக 'டக்-அவுட்' ஆனார். ஒரு சீசனில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் அபிஷேக். அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் (தலா 6) உள்ளனர்.
* நடப்பு கிரிக்கெட் லீக் சீசனில் 2வது முறையாக ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார் அபிஷேக். இதற்கு முன், லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஏமாற்றினார்.
* கிரிக்கெட் லீக் தொடரின் வரலாற்றில், ஆட்டத்தின் முதல் பந்தில் அவுட்டான 2வது ஐதராபாத் வீரரானார் அபிஷேக். ஏற்கனவே ஷிகர் தவான் (எதிர்: சென்னை, 2018, தகுதிச் சுற்று-1, இடம்: மும்பை) முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
முதல் பந்தில்...
கிரிக்கெட் லீக் அரங்கில், அதிக முறை ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் ஆர்ச்சர். இவர், 4 முறை இப்படி சாதித்தார். முதலிடத்தில் முகமது ஷமி (5 முறை) உள்ளார்.
மூன்றாவது வீரர்
கிரிக்கெட் லீக் அரங்கில், 90+ ரன்னில் அவுட்டாகி சதத்தை நழுவவிட்ட 3வது ஐதராபாத் வீரரானார் இஷான் கிஷான். ஏற்கனவே டேவிட் வார்னர் (90, 91, 92), ஜானி பேர்ஸ்டோவ் (97) இப்படி ஆட்டமிழந்தனர்.
