/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணிக்கு முதல் வெற்றி: முத்திரை பதித்த ஷெப்பர்ட்
/
மும்பை அணிக்கு முதல் வெற்றி: முத்திரை பதித்த ஷெப்பர்ட்
மும்பை அணிக்கு முதல் வெற்றி: முத்திரை பதித்த ஷெப்பர்ட்
மும்பை அணிக்கு முதல் வெற்றி: முத்திரை பதித்த ஷெப்பர்ட்
ADDED : ஏப் 07, 2024 11:47 PM

மும்பை: மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய லீக் போட்டியில் டில்லியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 10 பந்தில் 39 ரன் விளாசிய ஷெப்பர்ட், மும்பை அணிக்கு கைகொடுத்தார்.
இந்தியாவில் 17வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டி-20' அரங்கின் 'நம்பர்-1' வீரரான சூர்யகுமார், மும்பை அணியில் இடம் பெற்றார். 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்பில் இருந்து மீண்ட இவர், நான்கு மாதத்திற்கு பின் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
ரோகித் விளாசல்
மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷான் கலக்கல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த நிலையில், அக்சர் படேல் வலையில் ரோகித்(49 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்) சிக்கினார். நார்ட்ஜே பந்தில் சூர்யகுமார்(0) அவுட்டானார். இஷான் கிஷான் 42 ரன் எடுத்தார். பின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் அதிரடியாக ரன் சேர்த்தனர். பாண்ட்யா, 39 ரன்னுக்கு வெளியேறினார்.
ஒரே ஓவரில் 32 ரன்
கடைசி இரு ஓவரில் 51 ரன் எடுக்கப்பட, ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. இஷாந்த் ஓவரில்(19வது) ரொமாரியோ ஷெப்பர்ட்(வெஸ்ட் இண்டீஸ்) ஒரு பவுண்டரி, டேவிட் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க 19 ரன் கிடைத்தன. நார்ட்ஜே ஓவரில்(20வது) வாணவேடிக்கை காட்டிய ஷெப்பர்ட் 32 ரன் (4, 6, 6, 6, 4, 6) விளாசினார். கடைசி 5 ஓவரில் 96 ரன் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 234 ரன் குவித்தது. டேவிட்(45), ஷெப்பர்ட்(10 பந்தில் 39 ரன், 3 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்டப்ஸ் ஆறுதல்
கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு வார்னர்(10) ஏமாற்றினார். பின் பிரித்வி ஷா விளாச, 11 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்தது. பும்ரா 'வேகத்தில்' பிரித்வி(66 ரன், 8 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். அபிஷேக் போரல் 41 ரன் எடுத்தார். கோயட்சீ பந்தில் கேப்டன் ரிஷாப் பன்ட்(1) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. தனிநபராக போராடிய ஸ்டப்ஸ் அரைசதம் கடந்தார். டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்து, தோல்வி அடைந்தது. ஸ்டப்ஸ்(25 பந்தில் 71 ரன், 3 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
100 'கேட்ச்'
ஐ.பி.எல்., அரங்கில் 'பீல்டராக' 100 'கேட்ச்' என்ற மைல்கல்லை எட்டினார் ரோகித். இப்பட்டியலில் கோலி(110) முதலிடத்தில் உள்ளார்.
* ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணியின் பும்ரா, 150 விக்கெட்(124 போட்டி) எட்டினார்.
* ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு மைதானத்தில்(வான்கடே) அதிக வெற்றியை பதிவு செய்த அணியானது மும்பை(50).
* 'டி-20' அரங்கில் அதிக வெற்றி பெற்ற அணியானது மும்பை(150). அடுத்த இடத்தில் சென்னை(148) உள்ளது.
'ஸ்டிரைக் ரேட்' 390.00
ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில்(குறைந்தது 10 பந்துகள் சந்தித்தவர்) அதிக 'ஸ்டிரைக் ரேட்' கொண்டவரானார் ஷெப்பர்ட். 10 பந்தில் 39 ரன் விளாசிய இவரது 'ஸ்டிரைக் ரேட்' 390.00.

