தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹர்திக் பாண்ட்யா மீது கவாஸ்கர் காட்டம்

ஹர்திக் பாண்ட்யா மீது கவாஸ்கர் காட்டம்

ஹர்திக் பாண்ட்யா மீது கவாஸ்கர் காட்டம்


ADDED : ஏப் 15, 2024 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 10:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: ''சென்னைக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி, பந்துவீச்சு மோசமாக இருந்தது,'' என கவாஸ்கர் காட்டமாக விமர்சித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் ஹர்திக் பாண்ட்யாவின் நிலை பரிதாபமாக உள்ளது. குஜராத் அணியில் 'கெத்தாக' இருந்த இவரை, மும்பை அணியின் புதிய கேப்டனாக்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். இவரது பேட்டிங், பவுலிங் 'கிளிக்' ஆகவில்லை. சென்னைக்கு எதிராக கடைசி ஓவரை வீசினார். இதில் தோனி 3 'சிக்சர்' விளாச, மொத்தம் 26 ரன்னை வாரி வழங்கினார். 6 பந்தில் வெறும் 2 ரன் எடுத்தார். இதனால் சென்னை அணியிடம்(206/4), மும்பை(186/6) தோற்றது. நான்காவது தோல்வியை சந்தித்ததால், பாண்ட்யாவின் தலைமை பற்றி கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''மும்பை அணியின் பந்துவீச்சு, கேப்டன்சி எடுபடவில்லை. சென்னை அணியை 185-190 ரன்னில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு படுமோசமான பந்துவீச்சை பார்த்தேன். தனது 'ஹீரோ'(தோனி) மனம் குளிரும்படி பாண்ட்யா பந்துவீசியது போல இருந்தது. தோனியின் முதல் சிக்சரை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்து சிக்சர் அடிக்க ஏதுவான அளவில் பந்துவீசினார். இப்படிப்பட்ட பந்துக்காக காத்திருந்த தோனி இரண்டாவது சிக்சர் அடித்தார். அதற்கு அடுத்த பந்தை 'லெக்' திசையில் 'புல் டாசாக' வீசினார் பாண்ட்யா. வாய்ப்பை 'மிஸ்' செய்யாத தோனி மூன்றாவது சிக்சர் விளாசினார்,''என்றார்.

எதிர்ப்பும் பாதிப்பும்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில்,''மும்பை ரசிகர்களின் எதிர்ப்பு குரல் பாண்ட்யாவை அதிகம் பாதிக்கிறது. 'டாஸ்' முடிவு செய்ய வரும் போது, அதிகமாக சிரிக்கிறார். அதாவது மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்க முயற்சிக்கிறார். உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. பாண்ட்யாவின் பந்துவீச்சில் தோனி நாலாபுறமும் சிக்சர் விளாசியதை உள்ளூர் ரசிகர்கள் கொண்டாடினர். இது பாண்ட்யாவுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு. ஒரு இந்திய வீரரை இப்படி ரசிகர்கள் நடத்துவதை அவர் விரும்பவில்லை. ரசிகர்களின் செயல், அவரது கிரிக்கெட்டை பாதிக்கிறது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்,''என்றார்.



வீண் விமர்சனம்

மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் போலார்டு கூறுகையில்,''கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. தனிநபரை விமர்சிப்பது சரியல்ல. பாண்ட்யா ஓவரில் தோனி விளாசிய 20 ரன் தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் என்பது உண்மையே. தோனி களத்தில் இருக்கும் போது, யார் பந்துவீசினாலும் இதே கதி தான் ஏற்படும். விரைவில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம் பெறுவார். அப்போது இதே ரசிகர்கள் அவரை புகழ வேண்டியிருக்கும்,''என்றார்.

தோனி காயமா

இடது முழங்கால் 'ஆப்பரேஷனுக்கு' பின் ஐ.பி.எல்., தொடரில் விளையாடுகிறார் தோனி. மும்பைக்கு எதிரான போட்டிக்கு பின் 'டிரஸ்சிங் ரூம்' திரும்பிய போது வலியால் நடக்க சிரமப்பட்டார். சுவரில் கை வைத்தவாறு நடந்து சென்றார். இது குறித்து சென்னை அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறுகையில்,''தோனிக்கு எந்த அளவுக்கு வலி இருக்கிறது என தெரியவில்லை. எதையும் தாங்கும் மனம் கொண்ட கடினமான மனிதர். காயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us