/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தவறாக கணித்துவிட்டேன்: ரோகித் சர்மா வேதனை
/
தவறாக கணித்துவிட்டேன்: ரோகித் சர்மா வேதனை
ADDED : அக் 17, 2024 11:03 PM

பெங்களூரு டெஸ்டில் 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது தவறு. இதற்கான பொறுப்பை கேப்டன் ரோகித் சர்மா ஏற்றார்.
* மழை பெய்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. இதை கேப்டன் ரோகித் சர்மா கணிக்க தவறினார். கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற சூழல் காணப்பட, நியூசிலாந்து 'வேகங்கள்', இந்திய அணியை சிதறடித்தனர்.
* அணித் தேர்விலும் இந்தியா கோட்டைவிட்டது. மழை பெய்ததால், மூன்று 'வேகங்களை' சேர்த்திருக்க வேண்டும். பும்ரா, சிராஜ் உடன் ஆகாஷ் தீப்பை தேர்வு செய்திருக்கலாம். சமீபத்திய வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆகாஷ் சிறப்பாக பந்துவீசினார். அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என 3 'ஸ்பின்னர்க'ள் இடம் பெற்றது வியப்பாக இருந்தது. நியூசிலாந்து அணியில் சவுத்தீ, ஹென்றி, ரூர்க்கி என மூன்று 'வேகங்கள்' இடம் பெற்றனர்.
* பேட்டிங் ஆர்டரில் தேவையில்லாமல் மாற்றம் செய்தனர். 8 ஆண்டுகளுக்கு பின் 3வது இடத்தில் கோலியை களமிறக்கினர். 3வது இடத்தில் 6 இன்னிங்ஸ் விளையாடிய இவரது சராசரி 19.4 ஆக இருந்தது. நேற்று 'டக்' அவுட்டாக, 7 இன்னிங்சில் 97 ரன்களுடன் சராசரி 16.16 ஆக சறுக்கியது. இவரது வழக்கமான நான்காவது இடத்தில் 148 இன்னிங்சில் 7355 ரன் (சராசரி 52.53) குவித்துள்ளார். இவருக்கு பதில் ராகுலை மூன்றாவது இடத்தில் களமிறக்கியிருக்க வேண்டும்.
இது குறித்து ரோகித் சர்மா கூறுகையில்,''ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டேன். 46 ரன்னுக்கு ஆல் அவுட்டான போது, கேப்டனாக வேதனை அடைந்தேன். 365 நாளில் சில நேரங்களில் இது போன்ற தவறான முடிவை எடுக்க நேரிடலாம். நேற்றைய நாள் மோசமானதாக அமைந்தது. ஆடுகளத்தில் புற்கள் இல்லை என நினைத்தோம். மந்தமான களத்தில் குல்தீப் விக்கெட் வீழ்த்துவார். இதனால் தான் ஆகாஷ் தீப்பை சேர்க்கவில்லை. மூன்றாவது இடத்தில் களமிறங்குவது என்பது கோலியின் முடிவு. சர்பராஸ் கான் பொதுவாக நான்கு, ஐந்து அல்லது 6வது இடத்தில் வருவார். இதனால் 3வது இடத்தில் களமிறங்க முடியுமா என கோலியிடம் கேட்டோம். அனுபவ வீரர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும். இதன் அடிப்படையில் கோலியும் துணிச்சலாக களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,''என்றார்.

