ADDED : ஜூலை 08, 2026 11:18 PM

புதுடில்லி: ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இந்தியாவின் சவுரவ் கங்குலி சேர்க்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்படுவர். ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின் தான் இப்பட்டியலில் இடம் பெற பரிந்துரைக்கப்படுவர். இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார். இது, இன்று தனது 54வது பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பரிசாக அமைந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்த கங்குலி, 1992ல் பிரிஸ்பேனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். பின், 1996ல் (ஜூன் 20-24, எதிர்: இங்கிலாந்து) லார்ட்ஸ் டெஸ்டில் முதல் முறையாக களமிறங்கினார். இந்திய அணியை துணிச்சலாக வழிநடத்திய கங்குலி, 49 டெஸ்டில், 21 வெற்றி பெற்றுத்தந்தார். கடந்த 2003ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். கடந்த 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை 113 டெஸ்ட் (7212 ரன், 32 விக்கெட்), 311 ஒருநாள் (11,363 ரன், 100 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். ஓய்வுக்கு பின் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்த கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார்.
'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்ட 12வது இந்தியரானார் கங்குலி. இதற்கு முன் பிஷன் சிங் பேடி (2009), சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ் (2009), அனில் கும்ளே (2015), ராகுல் டிராவிட் (2018), சச்சின் (2019), வினோ மன்கட் (2021), டயானா எடுல்ஜி (2023), சேவக் (2023), நீத்து டேவிட் (2024), தோனி (2025) இப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதற்காக ஐ.சி.சி., மற்றும் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்தார் கங்குலி.
