/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., ரேங்கிங்: சிராஜ் முன்னேற்றம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
/
ஐ.சி.சி., ரேங்கிங்: சிராஜ் முன்னேற்றம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
ஐ.சி.சி., ரேங்கிங்: சிராஜ் முன்னேற்றம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
ஐ.சி.சி., ரேங்கிங்: சிராஜ் முன்னேற்றம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
ADDED : ஆக 06, 2025 10:14 PM

ஐதராபாத்: இங்கிலாந்து தொடரில் சாதித்த சிராஜுக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. விறுவிறுப்பான இத்தொடர் 2-2 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இந்தியாவின் முகமது சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4+5) சாய்த்து, ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் 5 போட்டியிலும் விளையாடிய சிராஜ், 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை பும்ராவுடன் (23 விக்., 2021-22) பகிர்ந்து கொண்டார்.
இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியினர் தாயகம் திரும்பினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 31, பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உடன் லண்டனில் இருந்து மும்பை வந்தார். அங்கிருந்து, தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றார் சிராஜ். ஐதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சிராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
15வது இடம்
இதனிடையே டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் சிராஜ் (674 புள்ளி), 27வது இடத்தில் இருந்து முதன்முறையாக 15வது இடத்துக்கு முன்னேறினார். இதற்கு முன், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16வது இடம் பிடித்திருந்தது சிராஜின் சிறந்த தரவரிசையாக இருந்தது. மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (889) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இங்கிலாந்து தொடரில் 'வேகத்தில்' அசத்திய பிரசித் கிருஷ்ணா (368), 25 இடம் முன்னேறி 59வது இடத்தை கைப்பற்றினார்.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (792), 8வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (908) முதலிடத்தில் நீடிக்கிறார். 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (405) முதலிடத்தில் தொடர்கிறார்.
'மேட்ச் வின்னர்'
முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' மொயீன் அலி கூறுகையில், ''இங்கிலாந்து தொடரில் வேகத்தில் அசத்திய சிராஜ், உலக தரத்தில் பந்துவீசினார். பக்குவமடைந்த இவர், இந்தியாவின் 'மேட்ச் வின்னராக' ஜொலித்தார். இவருக்கு எதிராக விளையாடுவது சவாலானது,'' என்றார்.