ADDED : பிப் 04, 2024 08:03 PM

ஆமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்று போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 'ஏ' 1-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் ஆமதாபாத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 192, இங்கிலாந்து லயன்ஸ் 199 ரன் எடுத்தன. இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 409 ரன் எடுத்தது. பின் 403 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 3ம் நாள் முடிவில் 83/2 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு அலெக்ஸ் லீஸ் (55), ராபின்சன் (80) நம்பிக்கை அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி 268 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா 'ஏ' சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை சாய் சுதர்சன் வென்றார்.