/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: முதல் ஒருநாள் போட்டியில்
/
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: முதல் ஒருநாள் போட்டியில்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: முதல் ஒருநாள் போட்டியில்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: முதல் ஒருநாள் போட்டியில்
ADDED : அக் 18, 2025 10:53 PM

பெர்த்: பெர்த் ஒருநாள் போட்டியில் இன்று அனுபவ ரோகித் சர்மா, விராத் கோலி விளாச காத்திருக்கின்றனர். கேப்டனாக சுப்மன் கில் முதல் முறையாக களமிறங்க இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை சாதனை வீரர்களான ரோகித் 38, கோலி, 36 களமிறங்குவது சிறப்பு. கடந்த மார்ச்சில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இவர்கள், 7 மாதங்களுக்கு பின் விளையாட உள்ளனர். இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். 'டாப்-ஆர்டரில்' ரோகித், கோலி (செல்லமாக ரோ-கோ) தீபாவளி 'சரவெடி' போல விளாச வேண்டும். கடைசியாக ரோகித் தலைமையில் இந்திய அணி 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இம்முறை வீரராக களம் காண்கிறார்.
சுப்மனுக்கு சவால்: சமீபத்திய இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கேப்டனாக திறமை நிரூபித்தார் இளம் சுப்மன் கில், 26. தற்போது ஒருநாள் போட்டிக்கும் தலைமை ஏற்க உள்ளார். கேப்டனாக ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் 75. இது சுப்மனுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கலாம். தனது கேப்டன் பயணத்தை இன்று வெற்றியுடன் துவக்க முயற்சிப்பார்.
நிதிஷ் அறிமுகம்: ஜெய்ஸ்வால் இருந்த போதும், துவக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்குவர். 3வது இடத்தில் கோலி, 4, 5வது இடத்தில் ஷ்ரேயஸ், ராகுல் வரலாம். நிதிஷ் குமார் அறிமுக வாய்ப்பு பெற உள்ளார். பந்துவீச்சில் சிராஜ், அர்ஷ்தீப், ஹர்ஷித் அல்லது பிரசித் கிருஷ்ணா இடம் பெறலாம். 'சுழலில்' அக்சர் படேல், குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம். கீப்பர் பணியை ராகுல் மேற்கொள்வார்.
ஹெட் பலம்: ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஜாம்பா, கிரீன், இங்லிஸ் இடம் பெறாதது பலவீனம். பெர்த் போட்டியில் கீப்பர்-பேட்டர் கேரி பங்கேற்க மாட்டார். ஒருநாள் போட்டியில் இருந்து மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றதால், பேட்டிங்கில் அனுபவ வீரர்கள் இல்லை. பேட்டர் மேட் ரென்ஷா, மிட்சல் ஓவன் அறிமுகமாகலாம். கேப்டன் மிட்சல் மார்ஷ், லபுசேன், மாத்யூ ஷார்ட், இந்திய அணிக்கு எப்போதும் தொல்லை தரும் டிராவிஸ் ஹெட் இடம் பெற்றிருப்பது பலம். 'வேகத்தில்' மிரட்ட ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளனர்.
ஆடுகளம் எப்படி
பெர்த் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சு எடுபடும். ரன் குவிப்பது சிரமம். இங்கு சராசரி ஸ்கோர் 183. அதிகபட்சமாக 153 ரன் சேஸ் செய்யப்பட்டுள்ளது.
மழை தொல்லை
பெர்த்தில் இன்று போட்டி துவங்கும் நேரத்தில் மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பு உள்ளது. போட்டி நடக்கும் நேரத்தில் 35 சதவீத வாய்ப்பு இருப்பதால், அடிக்கடி பாதிப்பு ஏற்படலாம்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 152 ஒருநாள் போட்டிகளில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 84, இந்தியா 58ல் வென்றன. 10 போட்டிக்கு முடிவு இல்லை.
* ஆஸ்திரேலிய மண்ணில் 54 ஒருநாள் போட்டிகளில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 38, இந்தியா 14ல் வென்றன. இரு போட்டிக்கு முடிவு இல்லை.
கவுரவம்
''ரோகித், கோலியின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான். இரு ஜாம்பவான்களை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வேன். இருவரிடமும் நல்லுறவு தொடர்கிறது. ஆடுகளத்தின் தன்மை உட்பட தேவையான ஆலோசனைகளை ரோகித்திடம் கேட்பேன்''
-சுப்மன் கில், இந்திய அணி கேப்டன்
'ஹவுஸ்புல்'
ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித், கோலிக்கு ஆதரவு அதிகம். இவர்களை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மூன்று ஒருநாள் போட்டிக்கும் சேர்த்து இதுவரை 1.75 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இன்றைய பெர்த் போட்டியை காண 50,000 ரசிகர்கள் மைதானத்திற்கு வரலாம்.