தொடரை கைப்பற்றியது இந்தியா: அபிஷேக், கேப்டன் சூர்யகுமார் அரைசதம்
தொடரை கைப்பற்றியது இந்தியா: அபிஷேக், கேப்டன் சூர்யகுமார் அரைசதம்
ADDED : ஜன 25, 2026 11:55 PM

கவுஹாத்தி: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி பெற்றது. 14 பந்தில் மின்னல் வேக அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா, கேப்டன் சூர்யகுமார் சேர்ந்து விரைவான வெற்றிக்கு வித்திட்டனர். தொடரை இந்தியா 3-0 என வென்றது. இது சூர்யகுமார் தலைமையில் 'டி-20' அரங்கில் இந்தியா பெற்ற 9வது தொடர் வெற்றி. நியூசிலாந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி அசாமின் கவுஹாத்தி, பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்திக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டது. பும்ரா, ரவி பிஷ்னோய் இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
பும்ரா மிரட்டல்: நியூசிலாந்து துவக்கத்தில் தடுமாறியது. ஹர்ஷித் ராணா வீசிய முதல் ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் கலக்கல் கேட்ச்சில் கான்வே (1) அவுட்டானார். பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் பிஷ்னோயின் அருமையான 'கேட்ச்சில்' ரச்சின் ரவிந்திரா (4) நடையை கட்ட, 1.4 ஓவரில் 13/2 ரன் எடுத்து தவித்தது. பும்ரா மணிக்கு 137.1 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் செய்பர்ட்டின் (12) 'ஆப்-ஸ்டம்ப்' பறந்தது.
பின் மார்க் சாப்மென், கிளப் பிலிப்ஸ் போராடினர். குல்தீப் ஓவரில் (9வது) சாப்மென் ஒரு பவுண்டரி, சிக்சர், பிலிப்ஸ் ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 19 ரன் எடுக்கப்பட்டன. துபே ஓவரில் சாப்மென் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார்.
இந்த சமயத்தில் பிஷ்னோய் வலையில் சாப்மென் (32) சிக்கினார். அடுத்து வந்த 'ஆபத்தான' டேரில் மிட்சல், ஹர்ஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். பாண்ட்யா பந்தில் மிட்சல் (14) வெளியேற, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பிஷ்னோய் 'சுழலில்' பிலிப்ஸ் (48) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பில்லாமல் போனது. பும்ரா ஓவரில் (18வது) ஜேமிசன் (3) போல்டானார். கேப்டன் சான்ட்னர், 27 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 153/9 ரன் எடுத்தது.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இஷான் விளாசல்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி. மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரின், முதல் பந்தில் போல்டான சாம்சன் (0) மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த இஷான் கிஷான் (6,6,4) விளாச, முதல் ஓவரில் 16 ரன் எடுக்கப்பட்டன. ஜேக்கப் டபி ஓவரில் அபிஷேக் ஒரு சிக்சர், பவுண்டரி, இஷான் ஒரு பவுண்டரி அடிக்க, மீண்டும் 16 ரன் கிடைத்தன. இஷான் 28 ரன்னுக்கு வெளியேறினார். பின் கேப்டன் சூர்யகுமார், அபிஷேக் சர்மா சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர் மழை பொழிய, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். டபி பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக், 14 பந்தில் அரைசதம் கடந்தார்.
சான்ட்னர் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் சூர்யகுமார். தொடர்ந்து பிலிப்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 25 பந்தில் அரைசதம் எட்டினார். பிலிப்ஸ் பந்தில் இன்னொரு பவுண்டரி அடித்த சூர்யகுமார் விரைவான வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 10 ஓவரில் 155/2 ரன் எடுத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. அபிஷேக் (68 ரன், 7x4, 5x6), சூர்யகுமார் (57 ரன், 6x4, 3x6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை பும்ரா (3/17) வென்றார்.
2வது இடம்
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் அபிஷேக் சர்மா. நேற்று இவர், 14 பந்தில் அரைசதம் விளாசினார். முதலிடத்தில் யுவராஜ் சிங் (12 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2007, இடம்: டர்பன்) உள்ளார்.
* இம்மைல்கல்லை எட்டிய சர்வதேச வீரர்கள் (ஐ.சி.சி., முழு உறுப்பினர் அணிக்கு எதிராக) பட்டியலில் 3வது இடத்தை (தலா 14 பந்து) நியூசிலாந்தின் கோலின் முன்ரோவுடன் (எதிர்: இலங்கை, 2016) பகிர்ந்து கொண்டார் அபிஷேக். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் யுவராஜ் சிங், நமீபியாவின் ஜான் பிரைலிங்க் (13 பந்து, எதிர்: ஜிம்பாப்வே, 2025, இடம்: புலவாயோ) உள்ளனர்.
'சூப்பர் கேப்டன்'
கடந்த 2023ல் கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஒரு முறை கூட 'டி-20' தொடரை இழந்ததில்லை. ஆசிய கோப்பை உட்பட 10 'டி-20' தொடர்களுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், 9ல் கோப்பை பெற்றுத்தந்தார். ஒரு தொடர் மட்டும் சமன் ஆனது.
* ஆஸ்திரேலியாவுக்கு (2023) எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு (2023) எதிராக 1-1 என சமன் செய்தது. அதன்பின், இலங்கை (3-0, 2024), வங்கதேசம் (3-0, 2024), தென் ஆப்ரிக்கா (3-1, 2024), இங்கிலாந்து (4-1, 2025), ஆஸ்திரேலியா (2-1, 2025), தென் ஆப்ரிக்காவுக்கு (3-1, 2025) எதிரான தொடர்களில் இந்தியா கோப்பை வென்றது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை ('டி-20') தொடரிலும் இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
* தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை 41 போட்டிகளுக்கு கேப்டனாக களமிறங்கிய இவர், 31 வெற்றி (75.6%), 6 தோல்வியை பெற்றுத்தந்துள்ளார். இரண்டு போட்டி 'டை' ஆனது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
தொடரும் ஆதிக்கம்
சர்வதேச 'டி-20' அரங்கில், வரிசையாக அதிக தொடரை கைப்பற்றிய அணிகளுக்கான பட்டியலில் (ஐ.சி.சி., முழு உறுப்பினர்) முதலிடத்தை பாகிஸ்தானுடன் (2016-18) பகிர்ந்து கொண்டுள்ளது இந்தியா (2024 முதல்...). இரு அணிகளும் தொடர்ச்சியாக 11 தொடர்களில் கோப்பை வென்றன.
* சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக 'டி-20' தொடரை கைப்பற்றிய அணிகளுக்கான (ஐ.சி.சி., முழு உறுப்பினர்) பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை 10 தொடரை (2022-26) வென்றது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (8 தொடர், 2006-10) உள்ளது.
