தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே * கோலியின் இனிய தருணங்கள்

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே * கோலியின் இனிய தருணங்கள்

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே * கோலியின் இனிய தருணங்கள்


ADDED : மார் 26, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''வெளிநாட்டில் இரு மாதங்கள் குடும்பத்துடன் இன்பமாக செலவிட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி,''என கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, 35. மகன் பிறந்ததால் லண்டனில் இருந்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு பின் இந்தியா திரும்பினார். நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் துவக்க வீரராக அசத்தினார். பஞ்சாப் அணியின் சாம் கர்ரான் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரி விளாசினார். 49 பந்தில் 77 ரன்(11 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து, பெங்களூரு அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். ஆட்ட நாயகன் விருதை வென்ற இவர், உலக கோப்பை தொடருக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

வரும் ஜூனில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கு கோலியை தேர்வு செய்ய வேண்டாம். இவரிடம் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பேசி சமரச தீர்வு காண வேண்டுமென பி.சி.சி.ஐ., வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகின. இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறுகையில்,''இந்திய அணியில் தகுதி அடிப்படையில் கோலி இடம் பெறுவாரா அல்லது ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர் என்ற முறையில் வாய்ப்பு பெறுவாரா,'' என கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து கோலி கூறியது:

உலகில் 'டி-20' போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே எனது பெயர் இப்போது பயன்படுத்தப்படுகிறது. என்னிடம் இன்னும் திறமை இருக்கிறது. 'டி-20' போட்டிகளில் துவக்க வீரராக வருவதால், அதிரடியாக ரன் எடுக்க வேண்டும். விக்கெட்டுகள் விரைவாக சரிந்தால், அதற்கு ஏற்ப விளையாட வேண்டியது அவசியம். பெங்களூரு ஆடுகளம் பேட் செய்ய கடினமானதாக இருந்தது. நான் 'கவர் டிரைவ்' ஷாட் சிறப்பாக அடிப்பேன் என அனைவருக்கும் தெரியும். இதற்கு வாய்ப்பு கொடுக்காமல் ரபாடா, அர்ஷ்தீப் போன்ற உயரமான பஞ்சாப் வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் பந்தை துாக்கி அடித்து ரன் சேர்க்க முயற்சித்தேன். இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு விளையாடிய நிலையில், எனது இன்னிங்ஸ் மோசமானது இல்லை.

சாதாரண மனிதராக...

கடந்த இரு மாதங்களாக வெளிநாட்டில்(இங்கிலாந்து) குடும்பத்துடன் பொழுதை செலவிட்டேன். அங்கு யாரும் எங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சாதாரண மனிதர்களை போல அன்றாட வாழ்க்கையை வாழ்ந்தோம். இரு குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து, குடும்பமாக ஒன்றாக பழகி கழித்த தருணங்கள் இனிமையானவை. இந்த வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி.

ரசிகர்கள் நினைவில்

இந்தியா திரும்பியதும் ரசிகர்களின் வாழ்த்து சத்தம் அதிகமாக இருந்தது. பழைய வாழ்க்கைக்கு திரும்பியதை உணர்ந்தேன். நீண்ட காலம் விளையாடும் போது உங்களை பற்றி நிறைய பேச்சு அடிபடும். 'சாதனைகள், புள்ளி விபரங்கள் எல்லாம் மனநிறைவு தராது. நல்ல நினைவுகள் நிலைத்து நிற்கும்' என டிராவிட் சொல்வார். ரசிகர்கள் என் மீது பொழியும் அன்பு, ஆதரவு என்றும் மறக்க முடியாது. இதுவே என் நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு கோலி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us