/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-இங்கிலாந்து 'டிரா': முதல் 'யூத்' டெஸ்டில்
/
இந்தியா-இங்கிலாந்து 'டிரா': முதல் 'யூத்' டெஸ்டில்
ADDED : ஜூலை 16, 2025 09:58 PM

பெக்கன்ஹாம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் (19 வயது) மோதிய முதல் 'யூத்' டெஸ்ட் போட்டி 'டிரா' ஆனது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆயுஷ் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெக்கன்ஹாமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 540, இங்கிலாந்து 439 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 128/3 ரன் எடுத்திருந்தது. விஹான் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு விஹான் மல்ஹோத்ரா (63), அம்ப்ரிஷ் (53) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். அபிக்யான் (11), ராகுல் குமார் (11) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். இந்திய அணி 2வது இன்னிங்சில் 248 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 'சுழலில்' அசத்திய இங்கிலாந்தின் ஆர்ச்சி வாகன் 6 விக்கெட் சாய்த்தார்.
பின், 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹம்சா ஷேக் (112), பென் மேயஸ் (51), தாமஸ் ரெவ் (50) நம்பிக்கை அளித்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 48 ஓவரில் 238/4 ரன் எடுத்து இருந்தது. அடுத்த 24 ஓவரில் வெற்றிக்கு 112 ரன் தேவைப்பட்டன.
ஆனால், சிறிது நேரத்தில் 258/7 என திணறியது. ஆல்பர்ட் (7), ஹோம் (7) விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 270/7 ரன் (63 ஓவர்) எடுத்த போது, போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. இந்தியா சார்பில் அம்ப்ரிஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.