/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி * நூறாவது டெஸ்டில் அஷ்வின் அசத்தல்
/
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி * நூறாவது டெஸ்டில் அஷ்வின் அசத்தல்
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி * நூறாவது டெஸ்டில் அஷ்வின் அசத்தல்
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி * நூறாவது டெஸ்டில் அஷ்வின் அசத்தல்
ADDED : மார் 09, 2024 03:56 PM

தர்மசாலா: ஐந்தாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுாறாவது டெஸ்டில் விளையாடிய அஷ்வின் மொத்தம் 9 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்த இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3--1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 473 ரன் எடுத்து, 255 ரன் முன்னிலை பெற்றிருந்தது. குல்தீப் (27), பும்ரா (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. குல்தீப்பை (30) அவுட்டாக்கிய ஆண்டர்சன், டெஸ்ட் அரங்கில் 700 விக்கெட் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார். தவிர இலங்கையின் முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் வார்னுக்கு (708) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது பவுலர் ஆனார். அடுத்து பும்ரா (20), பஷிர் சுழலில் அவுட்டானர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அஷ்வின் 'ஐந்து'
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் 'டாப் ஆர்டர்' அஷ்வின் 'சுழலில்' தகர்ந்தது. டக்கெட் (2), கிராலே (0), போப் (19), என மூவரும் அஷ்வினிடம் சிக்கினர். பேர்ஸ்டோவ் 39 ரன் எடுத்தார். ஸ்டோக்ஸ் (2), போக்ஸ் (8) என இருவரையும் அஷ்வின் போல்டாக்கினார். ஜோ ரூட் மட்டும் அதிகபட்சம் 84 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது.
அபார வெற்றி பெற்ற இந்தியா, டெஸ்ட் தொடரை 4-1 என வசப்படுத்தி, கோப்பை கைப்பற்றியது. அஷ்வின் மொத்தம் 9 விக்கெட் (4+5) வீழ்த்தினார். 100வது டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் வரிசையில் முரளிதரனுடன் (இலங்கை, 9) இணைந்து முதலிடம் பிடித்தார்.
ஆட்டநாயகனாக குல்தீப் தேர்வானார். ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் ஆனார்.

