இந்திய அணியில் ரிஷாப், துபே * 'டி-20' உலக கோப்பை தொடரில்
இந்திய அணியில் ரிஷாப், துபே * 'டி-20' உலக கோப்பை தொடரில்
ADDED : ஏப் 30, 2024 04:16 PM

ஆமதாபாத்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரிஷாப் பன்ட், துபே, சாம்சன் வாய்ப்பு பெற்றனர். ராகுல் சேர்க்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஜூன் 1-29ல் நடக்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடாவுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று ஆமதாபாத்தில் நடந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா, தேர்வுக்குழு தலைவர் அகார்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். துணைக் கேப்டனாக 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். விக்கெட் கீப்பர்களாக ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுலுக்கு இடமில்லை.
சென்னை அணிக்காக அசத்தி வரும் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்தனர். சுழலில் நீண்ட இடைவெளிக்குப் பின் சகாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருடன் குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.
அணி விபரம்
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சகால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ்.
மாற்று வீரர்கள்
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்.
