'ரோகித்-கோலி' கொடி பறக்குமா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்
'ரோகித்-கோலி' கொடி பறக்குமா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்
ADDED : செப் 26, 2026 11:17 PM

திருவனந்தபுரம்: முதல் ஒருநாள் போட்டியில், அனுபவ ரோகித், கோலி (செல்லமாக ரோ-கோ) அசத்த காத்திருக்கின்றனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் (செப். 27, 30-கவுஹாத்தி, அக். 3-நியூ சண்டிகர்) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.
ஐ.சி.சி., ஒருநாள் 'ரேங்கிங்' பட்டியலில் இந்தியா 'நம்பர்-1' இடத்தில் உள்ளது. 'சீனியர்' ரோகித் சர்மா, 39, கோலி, 37, வரவு அணிக்கு பலம். 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இருவரும் இடம் பிடிக்க விரும்புகின்றனர். இதற்குள் இந்தியா பங்கேற்க உள்ள 14-20 ஒருநாள் போட்டிகளில் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டும்.
யார் துவக்கம்: இன்று துவக்கத்தில் கேப்டன் சுப்மன் கில்-ரோகித் சர்மா வரலாம். ரோகித்-ஜெய்ஸ்வால் கூட்டணி பற்றியும் பரிசீலிக்கலாம். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித், நல்ல 'பார்மில்' உள்ளார். அடுத்து கோலி, 'கீப்பர்-பேட்டர்' ராகுல், 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா என 'பேட்டிங்' வலுவாக உள்ளது.
ஆசிய விளையாட்டில் பங்கேற்க பும்ரா, ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷான், அக்சர் படேல் உள்ளிட்டோர் ஜப்பான் சென்றுள்ளனர். இதனால், பந்துவீச்சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார், ஜடேஜா, குல்தீப் யாதவ் மிரட்டலாம்.
தொடரும் சோகம்: வெஸ்ட் இண்டீஸ் அணி (ரேங்கிங்-10வது இடம்), சொந்த மண்ணில் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த சோகத்தில் உள்ளது. தவிர, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று 24 ஆண்டுகளாகிறது. ஷாய் ஹோப் தலைமையில் களமிறங்குகிறது. ராஸ்டன் சேஸ், கிரிவ்ஸ், கேம்பல், கார்டி ரன் சேர்க்கலாம். 'ஆல்-ரவுண்டர்' ஷெர்பேன் ரூதர்போர்டு, 'வேகத்தில்' அல்ஜாரி ஜோசப், கீமோ பால், ஜேடன் சீல்ஸ், 'சுழலில்' குடகேஷ் கைகொடுக்கலாம்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 142 ஒருநாள் போட்டியில் மோதின. இந்தியா 72, வெ.இண்டீஸ் 64ல் வென்றன. 2 போட்டி 'டை' ஆனது. 4 போட்டிக்கு முடிவு இல்லை.
* திருவனந்தபுரத்தில் ஒரு போட்டியில் (2018) மோதின. இதில் வெ.இண்டீஸ் (31.5 ஓவரில் 104 ரன்) அணியை, இந்தியா (14.5 ஓவர், 105/1) 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
* ஆடுகளத்தில் ரன் குவிக்கலாம். போகப் போக 'ஸ்பின்னர்'களுக்கு உதவும்.
* இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு.
தொடருமா 'உலக' பயணம்
கோலி இதுவரை 14,941 ரன் (314 போட்டி) எடுத்துள்ளார். இன்னும் 59 ரன் எடுத்தால், ஒருநாள் அரங்கில் 15,000 ரன்னை எட்டலாம். சச்சினுக்கு (18,426 ரன், 463 போட்டி) அடுத்து, இம்மைல்கல்லை தொட்ட இரண்டாவது இந்திய வீரராகலாம்.
கோலி கூறுகையில்,''அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) சாதிக்க தயாராக உள்ளேன். கோப்பை வெல்வதே இலக்கு. இதுவே இந்தியாவுக்காக நான் பங்கேற்கும் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். கேப்டனாக சுப்மன் கில் நிறைய விஷயங்களை கற்று வருகிறார். அணியை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதில் ஆர்வமாக உள்ளார்,''என்றார்.
ஜெய்ஸ்வால் எப்படி
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில்,''துவக்கத்தில் ரோகித்-சுப்மன் கில்லுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். ஜெய்ஸ்வால் சிறந்த பேட்டர் தான். தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். பயிற்சியின் போது வலது முழங்கை பகுதியில் காயம் அடைந்த சுப்மன் தேறிவிட்டார். முழு உடற்தகுதியுடன் உள்ளார். இன்று களமிறங்குவார்,''என்றார்.
