/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கடைசி ஓவரில் இந்தியா வெற்றி: கரை சேர்த்தார் திலக் வர்மா
/
கடைசி ஓவரில் இந்தியா வெற்றி: கரை சேர்த்தார் திலக் வர்மா
கடைசி ஓவரில் இந்தியா வெற்றி: கரை சேர்த்தார் திலக் வர்மா
கடைசி ஓவரில் இந்தியா வெற்றி: கரை சேர்த்தார் திலக் வர்மா
ADDED : ஜன 25, 2025 11:16 PM

சென்னை: இரண்டாவது 'டி-20' போட்டியில் திலக் வர்மா அரைசதம் விளாச, இந்திய அணி கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 2வது போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில், காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கிற்கு பதிலாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அக்சர் அசத்தல்: இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (4), டக்கெட் (3) ஏமாற்றினர். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த கேப்டன் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். ஹாரி புரூக் (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பட்லர் (45), அக்சர் படேலிடம் சரணடைந்தார். தொடர்ந்து அசத்திய அக்சர் 'சுழலில்' லியாம் லிவிங்ஸ்டன் (13) ஆட்டமிழந்தார். ஜேமி ஸ்மித் (22), பிரைடன் கார்ஸ் (31) ஓரளவு கைகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. ஆர்ச்சர் (12), உட் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர், வருண் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
திலக் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் (5), அபிஷேக் சர்மா (12) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. அடுத்து வந்த திலக் வர்மா, ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, இந்திய அணி 4.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது. பிரைடன் கார்ஸ் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (12), துருவ் ஜுரெல் (4) அவுட்டாகினர். ஹர்திக் பாண்ட்யா (7) ஏமாற்றினார்.
மார்க் உட் வீசிய 13வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய வாஷிங்டன் சுந்தர் (26), ஓரளவு கைகொடுத்தார். அக்சர் படேல் (2) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய திலக், ஆர்ச்சர் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். அர்ஷ்தீப் (6) ஏமாற்றினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டன. ஓவர்டன் வீசிய முதல் பந்தில் 2 ரன் எடுத்த திலக், 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 19.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. திலக் (72), பிஷ்னோய் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.