/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'டி-20' கோப்பை வென்றது இந்தியா: 297 ரன் குவித்து சாதனை வெற்றி
/
'டி-20' கோப்பை வென்றது இந்தியா: 297 ரன் குவித்து சாதனை வெற்றி
'டி-20' கோப்பை வென்றது இந்தியா: 297 ரன் குவித்து சாதனை வெற்றி
'டி-20' கோப்பை வென்றது இந்தியா: 297 ரன் குவித்து சாதனை வெற்றி
ADDED : அக் 12, 2024 11:47 PM

ஐதராபாத்: சஞ்சு சாம்சன் சதம் விளாச, இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. 'டி-20' தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே 2-0 என தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் மூன்றாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ரவி பிஷ்னோய் இடம் பிடித்தார். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
சாம்சன் விளாசல்: இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா (4) ஏமாற்றினார். டஸ்கின் அகமது வீசிய 2வது ஓவரில் வரிசையாக 4 பவுண்டரி விரட்டினார் சஞ்சு சாம்சன். அடுத்து வந்த சூர்யகுமார் (செல்லமாக சூர்யா), தன்சிம் ஹசன் சாகிப் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். டஸ்கின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமார், தன்சிம் ஹசன் வீசிய 6வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் இந்திய அணி 82/1 ரன் எடுத்திருந்தது.
சூர்யகுமார் அபாரம்: ரிஷாத் ஹொசைன் வீசிய 7வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த சாம்சன், 22 பந்தில் அரைசதம் கடந்தார். சூர்யகுமார், 23 பந்தில் அரைசதம் எட்டினார். மஹெதி ஹசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாம்சன், சர்வதேச 'டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது முஸ்தபிஜுர் 'வேகத்தில்' சாம்சன் (111 ரன், 8 சிக்சர், 11 பவுண்டரி, 47 பந்து) வெளியேறினார்.
ரன் மழை: மஹமுதுல்லா பந்தில் சூர்யகுமார் (75 ரன், 35 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டானார். பின் இணைந்த ரியான் பராக், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் மழை பொழிந்தது. தன்சிம் ஹசன் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசினார் பாண்ட்யா. மஹெதி ஹசன் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் பராக். நான்காவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது டஸ்கின் பந்தில் பராக் (34) அவுட்டானார். தன்சிம் ஹசன் வீசிய கடைசி ஓவரில் பாண்ட்யா (47), நிதிஷ் குமார் ரெட்டி (0) அவுட்டாகினர். கடைசி பந்தை ரிங்கு சிங் சிக்சருக்கு அனுப்பினார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (8), வாஷிங்டன் சுந்தர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிஷ்னோய் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (43), தவ்ஹித் (63*) ஆறுதல் தந்தனர். கேப்டன் நஜ்முல் ஷான்டோ (14), மஹமுதுல்லா (8) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன்,தொடர் நாயகன் விருதை இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா வென்றனர்.
133 ரன் வித்தியாசம்
வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா (133 ரன்), 'டி-20' அரங்கில் அதிக ரன் வித்தியாசத்தில் தனது 3வது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே நியூசிலாந்து (168 ரன் வித்தியாசம், 2023), அயர்லாந்துக்கு (143 ரன், 2018) எதிராக இமாலய வெற்றி பெற்றிருந்தது.
22 பந்து
வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' போட்டியில் அதிவேக (22 பந்து) அரைசதம் விளாசிய இந்திய வீரரானார் சஞ்சு சாம்சன். இதற்கு முன், 2019ல் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.
7.1 ஓவரில்
இந்திய அணி 7.1 ஓவரில், 100 ரன்னை எட்டியது. இது, 'டி-20' அரங்கில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு. இதற்கு முன், 2019ல் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 8 ஓவரில் இந்த இலக்கை அடைந்திருந்தது.
ஒரே ஓவரில் 30 ரன்
ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன், 30 ரன் எடுத்தார். 'டி-20' அரங்கில் ஒரு ஓவரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மாவுடன் (தலா 30 ரன்) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் யுவராஜ் சிங், ரோகித் சர்மா, ரிங்கு சிங் (தலா 36 ரன்) உள்ளனர்.
152/1
'டி-20' அரங்கில் முதல் 10 ஓவரில், 150 ரன்னுக்கு மேல் குவித்த 3வது அணியானது இந்தியா. ஏற்கனவே ஆஸ்திரேலியா (156/3, எதிர்: ஸ்காட்லாந்து, 2024), எஸ்தோனியா (154/4, எதிர்: சைப்ரஸ், 2024) அணிகள் இம்மைல்கல்லை எட்டின.
40 பந்து
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 4வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன். இவர், 40 பந்தில் சதத்தை எட்டினார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் (35 பந்து, எதிர்: வங்கம், 2017), இந்தியாவின் ரோகித் சர்மா (35 பந்து, எதிர்: இலங்கை, 2017), வெஸ்ட் இண்டீசின் ஜான்சன் சார்லஸ் (39 பந்து, எதிர்: தெ.ஆப்ரிக்கா, 2023) குறைந்த பந்தில் சதம் விளாசினர்.
297 ரன்
சர்வதேச 'டி-20' அரங்கில் இந்திய அணி (297/6, 20 ஓவர்), தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2017ல் இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 260/5 ரன் எடுத்திருந்தது.
* தவிர இது, 'டி-20' அரங்கில் பதிவான 2வது அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே நேபாளம் அணி 314/3 ரன் (எதிர்: மங்கோலியா, 2023) குவித்திருந்தது.
* ஐ.சி.சி., முழு உறுப்பு நாடுகளில் அதிக ரன் குவித்த அணியானது இந்தியா. அதிக ரன் குவித்த 'டாப்-10' அணிகள்.
இரண்டாவது இடம்
சர்வதேச 'டி-20' அரங்கில் குறைந்த ஓவரில் 200 ரன்னை எட்டிய 2வது அணியானது இந்தியா. நேற்று, 14 ஓவரில், 200 ரன் எடுத்தது. ஏற்கனவே தென் ஆப்ரிக்க அணி 13.5 ஓவரில் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2023, செஞ்சுரியன்) இந்த இலக்கை அடைந்திருந்தது.