ADDED : ஜூன் 30, 2024 11:52 PM

பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பை வென்ற மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் நான்கு மணி நேரம் கொண்டாடினர். கேப்டன் ரோகித், அர்ஷ்தீப் உள்ளிட்ட வீரர்கள் பஞ்சாப் 'பாங்க்ரா' நடனமாடினர்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. கோலி (76) விளாச, இந்திய அணி 20 ஓவரில் 176/7 ரன் எடுத்தது.
யாருக்கு வாய்ப்பு
பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கிளாசன் கைகொடுத்தார். 15 ஓவரில் 147/4 ரன் எடுத்து வலுவாக இருந்தது. கடைசி 30 பந்தில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. ஓவருக்கு 6 ரன் தான் தேவை. கைவசம் 6 விக்கெட் இருந்தது. அப்போது யாருக்கு வெற்றி வாய்ப்பு... என்ற கம்ப்யூட்டர் கணிப்பில் தென் ஆப்ரிக்காவுக்கு 96.65 சதவீதம், இந்தியாவுக்கு 3.35 சதவீதம் என காண்பிக்கப்பட்டது.
பும்ரா, பாண்ட்யா திருப்பம்
கடைசி 5 ஓவரில் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்கினர். 16வது ஓவரில் பும்ரா 4 ரன் கொடுத்தார். 17வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் கிளாசன் (52) அவுட்டாக, இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. 18வது ஓவரை வீசிய பும்ரா, 2 ரன் மட்டும் கொடுத்து யான்செனை வெளியேற்றினார். 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப், 4 ரன் மட்டும் கொடுத்தார்.
கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டன. பாண்ட்யா பந்தில் மில்லர் (21) அவுட்டாக, இந்தியாவின் உலக சாம்பியன் கனவு நனவானது. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 169/8 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.
மைதானத்தில் உற்சாகம்
கடந்த 2007ல் தோனி தலைமையில் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினர், 17 ஆண்டுக்கு பின் மீண்டும் கோப்பை கைப்பற்றினர். இம்மகிழ்ச்சியில் கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட வீரர்கள், கென்சிங்டன் மைதானத்தில் ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டனர். கோலி, அர்ஷ்தீப், அக்சர் படேல், சிராஜ், ரிங்கு சிங் சேர்ந்து தலேர் மெகந்தியின் 'துனக் துனக் துன்' பாடலுக்கு பஞ்சாப் 'பாங்க்ரா' நடனமாடினர். ரசிகர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கார் விபத்தில் இருந்து மீண்ட ரிஷாப் பன்ட், இத்தொடரில் முத்திரை பதித்தார். இவர், ரசிகர் ஒருவருக்கு தனது 'ஷூ'வை அன்பளிப்பாக வழங்கினார். அர்ஷ்தீப் தனது பதக்கத்தை பெற்றோருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
பின் ஓய்வறைக்கு சென்று வெற்றியை கொண்டாடினர். மீண்டும் மைதானத்திற்கு வந்த இந்திய வீரர்கள், ஆடுகளத்தை கடைசியாக 'விசிட்' செய்தனர். அரை மணி நேரம் பைனல் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அணியில் நிலவிய இந்த ஒற்றுமையே கோப்பை வெல்ல கைகொடுத்தது.
வாழ்வின் சிறந்த தருணம்
கேப்டன் ரோகித் கூறுகையில்,''இந்திய அணிக்கு கோப்பை வென்று தருவதே இலக்காக இருந்தது. உலக கோப்பை வென்றது என் வாழ்வின் சிறந்த தருணம்,'' என்றார்.
பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில்,''உலக கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் வீரராக எனக்கு கிடைக்கவில்லை. தற்போதைய இந்திய அணி வீரர்கள் எனக்காக உலக கோப்பை வென்றுள்ளனர். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறேன்,'' என்றார்.
பார்படாசில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்படலாம். அதுவரை மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் தொடரலாம்.