/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி போராடி தோல்வி: ரவிந்திர ஜடேஜா ஆட்டம் வீண்
/
இந்திய அணி போராடி தோல்வி: ரவிந்திர ஜடேஜா ஆட்டம் வீண்
இந்திய அணி போராடி தோல்வி: ரவிந்திர ஜடேஜா ஆட்டம் வீண்
இந்திய அணி போராடி தோல்வி: ரவிந்திர ஜடேஜா ஆட்டம் வீண்
ADDED : ஜூலை 14, 2025 11:40 PM

லார்ட்ஸ்: பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் போராடிய இந்திய அணி, 22 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜா அரைசதம் வீணானது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. மூன்றாவது போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன் எடுத்தது.
பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 'டாப்-ஆர்டர்' விரைவில் சரிய, நான்காவது நாள் ஆட்ட முடிவில் 58/4 ரன் எடுத்திருந்தது.
ஸ்டோக்ஸ் மிரட்டல்: ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய வெற்றிக்கு இன்னும் 135 ரன் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் இருந்தன. இந்திய 'மிடில் ஆர்டர்' பேட்டர்கள் தடுமாறினர். இடது கை ஆள்காட்டி விரல் காயத்துடன் அவதிப்பட்ட ரிஷாப் பன்ட், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆர்ச்சர் 'வேகத்தில்' ரிஷாப் (9) 'ஆப் ஸ்டம்ப்' பறந்தது. ராகுலுக்கு எதிராக எல்.பி.டபிள்யு., கேட்டார் ஸ்டோக்ஸ். அம்பயர் மறுக்க, துணிச்சலாக 'ரிவியு' செய்தார். இதில் 'மிடில், லெக் ஸ்டம்ப்ஸ்' தகர்ப்பது உறுதியாக, ராகுல் (39) வெளியேறினார். ஆர்ச்சர் பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்து நடையை கட்டினார் வாஷிங்டன் (0). அப்போது இந்தியா 82/7 ரன் எடுத்து தவித்தது. வோக்ஸ் பந்தில் நிதிஷ் (13) அவுட்டானார். உணவு இடைவேளையின் போது 112/8 ரன் எடுத்து தத்தளித்தது. அப்போது வெற்றிக்கு 81 ரன் தேவைப்பட்டன.
ஜடேஜா அரைசதம்: தனிநபராக போராடிய ரவிந்திர ஜடேஜாவுக்கு 'டெயிலெண்டர்'கள் உதவினர். ஜடேஜா-பும்ரா ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தவித்தனர். இந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் பந்தை துாக்கி அடித்த பும்ரா (5 ரன், 54 பந்து) அவுட்டானார். ஸ்டோக்ஸ் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா அரைசதம் கடந்தார். இது, இவர் தொடர்ந்து அடித்த நான்காவது அரைசதம். தேநீர் இடைவேளையின் போது இந்திய வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது.
சிராஜ் பரிதாபம்: பின் ஆர்ச்சர் வீசிய 'பவுன்சர்' சிராஜின் இடது தோள்பட்டையில் பலமாக தாக்கியது. வலியால் அவதிப்பட்ட இவர், கீழே விழுந்தார். சிகிச்சைக்கு பின் மீண்டும் பேட் செய்தார். இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்ததால், ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் பதட்டம் அதிகரித்தது. இடது கை விரல் பகுதி காயத்திற்கு 'டேப்' சுற்றிக் கொண்டு பந்துவீசிய 'ஸ்பின்னர்' சோயப் பஷிர் திருப்பம் ஏற்படுத்தினார். இவர் வீசிய பந்து சிராஜ் பேட்டை உரசிச் சென்று 'லெக் ஸ்டம்ப்பை' தாக்க, 'பெயில்ஸ்' கீழ விழ, இந்திய ரசிகர்களின் நெஞ்சம் தகர்ந்தது. இங்கிலாந்து அணியினர் ஆர்ப்பரித்தனர். துரதிருஷ்டவசமாக போல்டான சிராஜ் (4 ரன், 30 பந்து) அதிர்ச்சியில் உறைந்து, ஆடுகளத்தில் அப்படியே அமர்ந்தார். இவரை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியது, விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜடேஜா (61) அவுட்டாகாமல் இருந்தார். லார்ட்சில் 'திரில்' வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.  ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வென்றார்.
நான்காவது டெஸ்ட் வரும் ஜூலை 23ல் மான்செஸ்டரில் துவங்குகிறது.
வார்த்தை மோதல்
நேற்று இரு அணி வீரர்களும் 'சூடாக' இருந்தனர். ரிஷாப் பன்ட்டை அவுட்டாகியதும் அவரை நோக்கி ஏதோ சொன்னார் ஆர்ச்சர். ரன் எடுக்க ஓடும் போது ஜடேஜா-கார்ஸ் மோதிக் கொண்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கேப்டன் ஸ்டோக்ஸ், அம்பயர் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
சிராஜிற்கு அபராதம்
இரண்டாவது இன்னிங்சில் டக்கெட்டை அவுட்டாக்கிய இந்தியாவின் சிராஜ், அவரை நோக்கி ஆர்ப்பரித்தார். அவரது தோளோடு லேசாக உரசினார். இது ஐ.சி.சி., நடத்தை விதிமுறைப்படி தவறு என்பதால், சிராஜிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம், ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
இது பற்றி இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில்,''மூன்றாவது நாள் ஆட்டத்தில் கிராவ்லேக்கு எதிராக இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசிய மோசமான வார்த்தைகள் 'ஸ்டம்ப்ஸ்' மைக்கில் பதிவாகின. சிராஜிற்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், கில்லுக்கு விலக்கு அளித்திருப்பது வினோதமாக உள்ளது,''என்றார்.
நான்காவது முறை
டெஸ்ட் அரங்கில் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் அதிக முறை (4) ஆட்ட நாயகன் விருது வென்ற வீரரானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இந்தியா (2025), நியூசிலாந்து (2015), வெஸ்ட் இண்டீஸ் (2017), ஆஸ்திரேலியாவுக்கு (2019) எதிராக இங்கு நடந்த டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இந்தியர்
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த 2வது இந்திய வீரரானார் ஜடேஜா (72, 61*). இதற்கு முன் 1952ல் இந்தியாவின் வினு மன்கட் (72, 184) இப்படி சாதித்திருந்தார்.
குறைந்த ரன்னில்...
லார்ட்சில் ஏமாற்றிய இந்தியா, டெஸ்ட் அரங்கில் குறைந்த ரன் வித்தியாசத்தில் தனது 4வது தோல்வியை பெற்றது. சென்னை டெஸ்டில் (1999), 12 ரன்னில் தோற்றது இந்தியாவின் அதிர்ச்சி தோல்வியாக உள்ளது.

