/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆறு ரன்னில் இந்தியா 'திரில்' வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தல்
/
ஆறு ரன்னில் இந்தியா 'திரில்' வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தல்
ஆறு ரன்னில் இந்தியா 'திரில்' வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தல்
ஆறு ரன்னில் இந்தியா 'திரில்' வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தல்
UPDATED : ஆக 04, 2025 11:28 PM
ADDED : ஆக 04, 2025 11:27 PM

லண்டன்: பரபரப்பான ஓவல் டெஸ்டில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், வெற்றிக்கு கைகொடுத்தார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் - சச்சின் டிராபி) பங்கேற்றது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 339/6 ரன் எடுத்திருந்தது.
சிராஜ் திருப்பம்: கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வெற்றிக்கு 4 விக்கெட், இங்கிலாந்துக்கு 35 ரன் தேவைப்பட்டன. பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஓவர்டன் வரிசையாக 2 பவுண்டரி அடிக்க, இலக்கு 27 ஆக குறைந்தது. பின் சிராஜ் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் 'ஆபத்தான' ஜேமி ஸ்மித் (2) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இவரது அடுத்த ஓவரில் ஓவர்டன் (9) எல்.பி.டபிள்யு., ஆனார். இதற்கு 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' ஜோஷ் டங் (0) போல்டானார். இதனால் தோள்பட்டையில் காயம் அடைந்த வோக்ஸ் களமிறங்கும் நிலை ஏற்பட்டது.
57 நிமிடத்தில்: சற்று தாக்குப்பிடித்த அட்கின்சன், சிராஜ் பந்தை துாக்கி அடித்தார். எல்லையில் ஆகாஷ் தீப் நழுவவிட, 'சிக்சர்' ஆனது. தேவையான ரன் ஒற்றை இலக்கமாக குறைய, பதட்டம் அதிகரித்தது. இந்த நேரத்தில் சிராஜ் வீசிய துல்லிய 'யார்க்கரில்' அட்கின்சன் (17) 'ஆப்-ஸ்டம்ப்' தகர்ந்தது. இதையடுத்து சிராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்தனர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 367 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 57 நிமிடங்களில் இங்கிலாந்தின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. தொடர் 2-2 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
மொத்தம் 9 விக்கெட் (4+5) வீழ்த்திய சிராஜ், ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
பும்ரா சாதனை சமன்
இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை பும்ராவுடன் (2021-22) பகிர்ந்து கொண்டார் சிராஜ். இருவரும் தலா 23 விக்கெட் கைப்பற்றினர்.
குறைந்த ரன்னில்...
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா, டெஸ்ட் அரங்கில் குறைந்த ரன் வித்தியாசத்தில் (6) வெற்றி பெற்றது. இதற்கு முன், 2004ல் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 13 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
* இங்கிலாந்து அணி 2வது முறையாக 6 ரன்னில் தோற்றது. இதற்கு முன் 1885ல் சிட்னி டெஸ்டில் (எதிர்-ஆஸி.,) இப்படி தோற்றது. தவிர இது, குறைந்த ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் 3வது தோல்வியானது. ஏற்கனவே நியூசிலாந்து (2023, வெலிங்டன்), ஆஸ்திரேலியாவுக்கு (1902, மான்செஸ்டர்) எதிராக முறையே 1, 3 ரன்னில் தோல்வியடைந்திருந்தது.
ரிசல்ட்
* லீட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி (5 விக்.,)
* பர்மிங்ஹாம் டெஸ்ட்: இந்தியா வெற்றி (336 ரன்)
* லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி (22 ரன்)
* மான்செஸ்டர் டெஸ்ட்: 'டிரா'
* ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி (6 ரன்)
முடிவு: 2-2 (தொடர் சமன்)
முதன்முறை
ஓவல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி, அன்னிய மண்ணில் விளையாடிய 5 அல்லது 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றது. இதற்கு முன் விளையாடிய 17 டெஸ்டில், 10ல் தோல்வியடைந்தது. ஏழு போட்டி 'டிரா' ஆனது.
* சொந்த மண்ணில் நடந்த 5 அல்லது 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் 27 முறை விளையாடிய இந்தியா, 7 வெற்றி, 4 தோல்வியை பதிவு செய்தது. மீதமுள்ள 16 டெஸ்ட், 'டிரா' ஆனது.
'754' ரன்
இத்தொடரில் அதிக ரன் குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன் எடுத்தார்.
சிராஜ் '23'
அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 23 விக்கெட் சாய்த்தார்.
மூன்றாவது முறை
லண்டன், ஓவல் மைதானத்தில் இந்திய அணி 3வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய 15 டெஸ்டில், 3 வெற்றி, 5 தோல்வியை பெற்றது. ஏழு போட்டி 'டிரா' ஆனது.
* இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி 3வது முறையாக டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதற்கு முன், கங்குலி (2002), கோலி-பும்ரா (2021-22) தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்திருந்தது.
* டெஸ்ட் தொடரில் பங்கேற்க 20வது முறையாக இங்கிலாந்து சென்ற இந்தியா, மூன்று முறை (1971, 1986, 2007) தொடரை கைப்பற்றியது. மூன்று முறை (2002, 2021-22, 2025) தொடரை சமன் செய்த இந்தியா, 14 முறை (1932, 36, 46, 52, 59, 67, 74, 79, 82, 90, 96, 2011, 2014, 2018) தொடரை இழந்தது.