/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்... * பிரிஸ்பேன் டெஸ்டில் சாதிக்க 'ரெடி'
/
பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்... * பிரிஸ்பேன் டெஸ்டில் சாதிக்க 'ரெடி'
பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்... * பிரிஸ்பேன் டெஸ்டில் சாதிக்க 'ரெடி'
பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்... * பிரிஸ்பேன் டெஸ்டில் சாதிக்க 'ரெடி'
ADDED : டிச 10, 2024 11:26 PM

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணியினர், அடிபட்ட புலி போல திருப்பி தாக்க தயாராகின்றனர். பிரிஸ்பேன் போட்டியில் சாதிக்க, கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தோற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் வரும் 14ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணியினர் பிரிஸ்பேன் புறப்பட்டு சென்றனர்.
'பேட்டிங் ஆர்டர்' மாறுமா
அடிலெய்டு போட்டி இரண்டரை நாளில் முடிந்த நிலையில், எஞ்சிய நேரத்தை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அடிலெய்டில் தங்கி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்தொடரில் 'பேட்டிங்' எடுபடவில்லை. இதுவரை இந்தியா விளையாடிய நான்கு இன்னிங்சில் (பெர்த்தில் 150, 487/6, அடிலெய்டில் 180, 175) 3 முறை 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் (161), கோலி (100) மட்டுமே சதம் அடித்தனர். பின் வரிசையில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார்(163 ரன்) நம்பிக்கை தருகிறார். கேப்டன் ரோகித் சர்மா கடந்த 12 இன்னிங்சில் ஒரு அரைசதம் உட்பட 142 ரன் தான் எடுத்துள்ளார். அடிலெய்டில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய இவர், சோபிக்கவில்லை. இதனால் நேற்றைய வலை பயிற்சியில் பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முதலில் ராகுல், ஜெய்ஸ்வால் வந்தனர். இவர்களே மீண்டும் துவக்க வீரர்களாக களமிறங்கலாம். பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்காது. ரோகித் 'மிடில் ஆர்டரில்' தொடரலாம். கோலி, ரோகித், ரிஷாப் பன்ட் என்ற வரிசையில் பயிற்சிக்கு வந்தனர்.
ரிஷாப் பன்ட் அதிர்ச்சி
ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள், 'ஸ்பின்னர்'கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினர். 'த்ரோடவுன்' ஸ்பெஷலிஸ்ட் சிலரும் பந்துவீசினர். ஒரு 'பவுன்சர்' பந்து ரிஷாப் 'ஹெல்மெட்' மீது பலமாக தாக்க, பயிற்சியை நிறுத்தினார். உடனே ராகுல், கோலி, இந்திய அணியின் மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் ரிஷாப் பயிற்சியை தொடர, நிம்மதி பிறந்தது.
பும்ராவுக்கு 'ரெஸ்ட்'
அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் போது, தொடை பிடிப்பால் பும்ரா அவதிப்பட்டார். இவருக்கு கூடுதல் சுமை கொடுக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. நேற்றைய பயிற்சியில் பும்ரா, சிராஜ், 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
ரசிகர்கள் தொல்லை
அடிலெய்டு போட்டிக்கு முன், இந்திய வீரர்களின் பயிற்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். வீரர்களின் பெயரை சொல்லி அழைத்தனர். இதை கண்டுகொள்ளாதவர்களை திட்டினர். இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''வலை பயிற்சியின் போது ரசிகர்களை அனுமதிப்பது கிடையாது. அடிலெய்டில் தான் முதல் முறையாக இத்தகைய நிலையை சந்தித்தோம். பயிற்சியின் போது நிறைய திட்டங்கள் வகுப்போம். இதை மற்றவர் முன் விவாதிக்க முடியாது. ரசிகர்களை அனுமதிப்பது அசவுகரியமான உணர்வை தருகிறது,''என்றார்.
இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனிலும் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்திய வீரர்களுக்கு மீண்டும் தொல்லை கொடுக்கலாம்.