/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா வராறே... கதறவிட போறாரே * அச்சத்தில் ஆஸி., வீரர்கள்
/
பும்ரா வராறே... கதறவிட போறாரே * அச்சத்தில் ஆஸி., வீரர்கள்
பும்ரா வராறே... கதறவிட போறாரே * அச்சத்தில் ஆஸி., வீரர்கள்
பும்ரா வராறே... கதறவிட போறாரே * அச்சத்தில் ஆஸி., வீரர்கள்
ADDED : நவ 19, 2024 11:30 PM

பெர்த்: ''பும்ரா பந்துவீச்சை சமாளிப்பது கடினமான காரியம்,''என ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல், பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் துவங்குகிறது.
கேப்டன் பணியில்
ரோகித் இடம் பெறாத நிலையில், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா, 30 களமிறங்க உள்ளார். இவரது வித்தியாசமான பந்துவீசும் முறை, அசுர வேகம், துல்லியமான யார்க்கர்கள் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை கலங்கடிக்க உள்ளன. 1970களில் வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் போன்ற 'வேகப்புயல்களை' பார்த்து அஞ்சினர். இதற்கு பின் பும்ராவை பார்த்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் பயப்படுவதாக உள்ளூர் ஆஸ்திரேலிய 'மீடியா' செய்தி வெளியிடுகின்றன.
வெற்றி நாயகன்
மணிக்கு சராசரியாக 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் பும்ரா, கடந்த இரு முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி, 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இங்கு 7 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் (சராசரி 21.25) வீழ்த்தியுள்ளார். இதில் 2018ல் மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் (6/33, 3/53) மிரட்டிய இவர், வெற்றி நாயகனாக ஜொலித்தார். இவரை பாராட்டிய தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியது:
டிராவிஸ் ஹெட்: பும்ரா 'வேகத்தை' சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் சிரமப்பட வேண்டும். மூன்றுவித கிரிக்கெட்டிலும் வியக்கத்தக்க வகையில் பந்துவீசுகிறார். இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்கிறார். இக்கட்டான கட்டத்தில் இவரை தான் நம்புகின்றனர். அவரும் விக்கெட் வீழ்த்தி, அணியை கரை சேர்க்கிறார். தற்போதைய டெஸ்ட் தொடரிலும் இவரது பந்துவீச்சு, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
கவாஜா: பும்ரா பந்துவீசும் முறை வித்தியாசமாக இருக்கும். இவரது கை எந்த பக்கம் செல்கிறது என்பதை கணிப்பது கடினம். ஒருவிதத்தில் மிட்சல் ஜான்சனை போல மின்னல் வேகத்தில் பந்துவீசுவார். முதன் முதலில் பும்ரா பந்தை சந்தித்த போது, அதிர்ந்து போனேன். பந்து எங்கிருந்து வருகிறது என்பது அறியாமல் தவித்து போனேன். எப்படி பந்தை 'ரிலீஸ்' செய்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.
ஸ்டீவ் ஸ்மித்: பும்ரா பந்துவீசும் முறை புதுமையானது. மற்ற பவுலர்களிடம் இருந்து மாறுபட்டது. ஆரம்ப காலத்தில் சிரமப்பட்டேன். தற்போது இவருடன் அதிக போட்டிகளில் விளையாடி விட்டேன். இருப்பினும் இவரது சில பந்துகளை சந்தித்த பின் தான், ரன் எடுக்க முடிகிறது.
லபுசேன்: தரமான பவுலர் பும்ரா. அதிக துாரம் ஓடி வந்து பந்துவீச மாட்டார். ஆனால், தந்திரமான 'பவுன்சர்' மூலம் திணறடிப்பார்.
பிரட் லீ (முன்னாள் வீரர்): சத்தம் இல்லாமல் சாதிக்கக் கூடியவர் பும்ரா. மீண்டும் முத்திரை பதிப்பார்.
வாட்சன் (முன்னாள் வீரர்): பந்துகளை நன்கு 'ஸ்விங்' செய்கிறார் பும்ரா. நல்ல வேகத்தில் பந்துவீசுவது பலம்.
வெற்றி மந்திரம்
பும்ரா கூறுகையில்,''எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றி தேடித் தரும். இதை தான் சக வீரர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். டெஸ்ட் தொடரில் முழு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவோம்,''என்றார்.