/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் பாராட்டு * நாளை பகலிரவு பயிற்சி போட்டி
/
இந்திய வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் பாராட்டு * நாளை பகலிரவு பயிற்சி போட்டி
இந்திய வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் பாராட்டு * நாளை பகலிரவு பயிற்சி போட்டி
இந்திய வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் பாராட்டு * நாளை பகலிரவு பயிற்சி போட்டி
ADDED : நவ 28, 2024 10:51 PM

கான்பெரா: ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசுடன், இந்திய அணி வீரர்கள் சந்தித்து பேசினர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் டிசம்பர் 6-10ல் நடக்கவுள்ளது.
இதற்கு தயாராகும் வகையில், இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன், இருநாள் கொண்ட, பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது. நாளை துவங்கும் இப்போட்டி கான்பெராவில் உள்ள மானுகா ஓவல் மைதானத்தில் நடக்கும்.
இதனிடையே கான்பெராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்தார். அப்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சக வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, கோலி உள்ளிட்டோரை, அல்பானீஸ் பாராட்டினார்.
பும்ராவிடம்,' உங்களது ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது,' என்றார். பின் கோலியிடம்,'பெர்த்தில் சதம் அடித்து அசத்தி விட்டீர்கள்,' என பாராட்டினார்.
அப்போது ஜாக் எட்வர்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணி வீரர்களும் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அல்பானீஸ் வெளியிட்ட செய்தியில்,' இந்திய அணி வியக்கத்தக்கதாக உள்ளது. மானுகா ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய 'லெவன்' அணி வீரர்களுக்கு சவால் காத்திருக்கிறது. ஆனால் இந்திய பிரதமர் மோடியிடம் கூறியது போல,'ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவர்,' என தெரிவித்துள்ளார்.
வெற்றி தொடர வேண்டும்
ஆஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியது:
ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த வாரமும் இதை சாதித்தோம். இந்த வெற்றிகளை மீண்டும் தொடர விரும்புகிறோம்.
இங்குள்ள ஒவ்வொரு நகரமும், வித்தியாசமான உணர்வை தருகின்றன. இவற்றை ரசித்து மகிழ்வதற்காக அடுத்தடுத்து இங்கு வர விரும்புகிறோம். அடுத்த சில வாரங்களில் ஆஸ்திரேலிய மக்களையும், இந்திய ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என நம்புகிறோம். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி மகிழ்ச்சி
இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், 'இந்தியா, ஆஸ்திரேலிய லெவன் அணி வீரர்களுடன் எனது நண்பர், பிரதமர் அல்பானீசை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. டெஸ்ட் தொடரை இந்திய அணி சிறப்பாக துவக்கியுள்ளது. 140 கோடி இந்தியர்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது. தொடர்ந்து சிறப்பான போட்டிகளை எதிர்பார்த்துள்ளேன்,' என தெரிவித்துள்ளார்.
வெப்ஸ்டர் வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ். போதிய உடற்தகுதியில்லாமல் அவதிப்படுகிறார். இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அறிமுக வீரர் பியு வெப்ஸ்டர் 30, சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் ஷெப்பீல்டு தொடரில் 5 சதம், 9 அரைசதம் உட்பட மொத்தம் 1788 ரன் எடுத்துள்ளார். அடிலெய்டு டெஸ்டில் இவர் அறிமுகம் ஆகலாம்.