/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பதறிய பும்ரா...பயமறியா கான்ஸ்டாஸ் * மெல்போர்ன் டெஸ்டில் 'விறுவிறு'
/
பதறிய பும்ரா...பயமறியா கான்ஸ்டாஸ் * மெல்போர்ன் டெஸ்டில் 'விறுவிறு'
பதறிய பும்ரா...பயமறியா கான்ஸ்டாஸ் * மெல்போர்ன் டெஸ்டில் 'விறுவிறு'
பதறிய பும்ரா...பயமறியா கான்ஸ்டாஸ் * மெல்போர்ன் டெஸ்டில் 'விறுவிறு'
UPDATED : டிச 26, 2024 11:19 PM
ADDED : டிச 25, 2024 10:31 PM

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் இளம் கான்ஸ்டாஸ் அசத்தினார். துவக்கத்தில் பதறிய பும்ரா, கடைசி கட்டத்தில் மிரட்டினார். 3 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணிக்கு நம்பிக்கை தந்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) நேற்று மெல்போர்னில் துவங்கியது. இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு, 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். கடந்த போட்டிகளில் 6வது இடத்தில் வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியானது. ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். ஹேசல்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலந்து இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வலுவான துவக்கம்
ஆஸ்திரேலிய அணிக்கு 19 வயது இளம் கான்ஸ்டாஸ் அதிரடி துவக்கம் தந்தார். துணிச்சலாக ஆடிய இவர், பும்ராவையே தொட்டு பார்த்தார். இவரது ஓவரின் (போட்டியின் 7வது) முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். 2வது பந்தை 'டி-20' போல 'ரிவர்ஸ் ஸ்கூப்' செய்து சிக்சருக்கு பறக்கவிட்டார். 5வது பந்தில் பவுண்டரி அடிக்க, 14 ரன் எடுக்கப்பட்டன. மீண்டும் பந்துவீச வந்த பும்ரா ஓவரில் (11வது) இம்முறை கான்ஸ்டாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, 18 ரன் கிடைத்தன. 52 பந்தில் அரைசதம் எட்டினார் கான்ஸ்டாஸ். மறுபக்கம் கவாஜா அடக்கி வாசிக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த நிலையில், ஜடேஜா 'சுழலில்' கான்ஸ்டாஸ் (60 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். ஆகாஷ் தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கவாஜா அரைசதம் கடந்தார்.
பும்ரா 'மேஜிக்'
முதல் இரண்டு 'செஷனில்' ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. கடைசி 'செஷனில்' பும்ரா சாகசம் நிகழ்த்த, இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. இவரது 'வேகத்தில்' கவாஜா (57) வீழ்ந்தார். வாஷிங்டன் வலையில் லபுசேன் (72) சிக்கினார். கடந்த போட்டிகளில் சதங்களாக அடித்து, இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த டிராவிஸ் ஹெட் (0), பும்ராவின் 'மேஜிக்' பந்தில் போல்டானார். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் பூம்...பூம்...பூம்ரா என உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து மிரட்டிய பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷும் (4) அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தார். அலெக்ஸ் கேரி, 31 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (68), கம்மின்ஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இன்று எஞ்சிய ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டும். பின் இந்தியா பேட்டர்கள் சிறப்பான ஆடுகளத்தில் பொறுப்பாக ஆடினால், வலுவான ஸ்கோரை எட்டலாம்.
தந்தையின் 'தவறான' பயிற்சி
கான்ஸ்டாஸ் அதிரடி ஆட்டத்திற்கு அவரது தந்தை கொடுத்த பயிற்சி தான் காரணமாம். இதுகுறித்து கான்ஸ்டாஸ் சகோதரர் பில்லி கூறுகையில்,''ஆறு வயதில் கான்ஸ்டாசிற்கு, தந்தை 'பவுலிங் மெஷினில்' பந்து வீசச் செய்து பேட்டிங் பயிற்சி கொடுத்தார். அவர், மணிக்கு 90 கி.மீ., வேகம் என நினைத்து, 90 மைல் (145 கி.மீ.,) வேகத்தில் 'செட்' செய்து, பந்து வீசச் செய்தார். அவரது தவறு, இன்று கைகொடுத்துள்ளது. எங்களது கனவு நனவானது,'' என்றார்.
18 ரன்
பும்ராவின் ஓவரில், கான்ஸ்டாஸ் 18 ரன் விளாசினார். டெஸ்டில் ஒரு ஓவரில் பும்ரா வழங்கிய அதிகபட்ச ரன் இது. முன்னதாக 2020ல் பும்ரா 16 ரன் கொடுத்திருந்தார்.
4562 பந்து
கடந்த 2021 சிட்னி டெஸ்டில், பும்ரா பந்தில் கேமரான் கிரீன் (ஆஸி.,) சிக்சர் அடித்தார். இதன் பின் பும்ரா வீசிய 4562 பந்தில் யாரும் சிக்சர் அடிக்கவில்லை. நேற்று கான்ஸ்டாஸ் சிக்சர் விளாசி சாதித்தார்.
அதிவேக அரைசதம்
கான்ஸ்டாஸ் நேற்று 52 பந்தில் அரைசதம் அடித்தார். கில்கிறிஸ்ட் (46 பந்து, 1999, பாக்.,), ஆஷ்டன் ஏகாருக்குப் (50, 2013, இங்கிலாந்து) பின் அறிமுக டெஸ்டில் அதிவேக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஆனார் கான்ஸ்டாஸ்.
19 வயது, 85 நாள்
ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆன இளம் துவக்க வீரர் ஆனார் கான்ஸ்டாஸ் (19 வயது, 85 நாள்). அறிமுக டெஸ்டில் அரைசதம் (60 ரன்) அடித்த ஆஸ்திரேலிய இளம் வீரர் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் கிரெய்க் (17 வயது, 239 நாள்) உள்ளார்.