உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; அக்டோபரில் உச்சம்
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; அக்டோபரில் உச்சம்
ADDED : நவ 01, 2025 08:43 PM

மாஸ்கோ:இரண்டரை ஆண்டுகளில் இல்லாததை விட, கடந்த அக்டோபர் மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிக எண்ணிக்கையில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யா,
உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை
முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக
நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால்,
இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்ய
படைகள் ஏவுகணை மற்றும் டிரோன்களை வீசி, நாளுக்கு நாள் உக்ரைன் மீதான
தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டரை
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் உக்ரைன்
மீது ரஷ்யா அதிக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் மட்டும் 270 ஏவுகணைகளை வீசி ரஷ்யா
தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது கடந்த மாதங்களுடன்
ஒப்பிடும் போது 46 சதவீதம் அதிகமாகும். அதேபோல, அக்டோபரில் மட்டும் நீண்ட
தூர இலக்கை தாக்கும் வகையிலான 5,298 டிரோன்களைக் கொண்டு தாக்குதலை
நடத்தியுள்ளது.
இரவு நேரங்களில் மின் கட்டமைப்புகளை குறி வைத்து
ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மின்சாரம்
துண்டிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது
குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், 'மின் கட்டமைப்புகளை
தாக்குவதன் மூலம் மக்கள் மீது உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதே ரஷ்யாவின்
நோக்கம்,' என்றார்.
அதேவேளையில், ரஷ்யாவில் உள்ள எண்ணெய்
கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தி
வருகிறது. இதன்மூலம், எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

