நீண்டகாலமாக கட்டுமானத்தில் இருந்த மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறப்பு
நீண்டகாலமாக கட்டுமானத்தில் இருந்த மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறப்பு
ADDED : நவ 01, 2025 08:09 PM

கெய்ரோ : 'ஜெம்' எனும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மேற்காசிய நாடான எகிப்து தலைநகர் கெய்ரோவின் டஹ்ரிர் சதுக்கத்தில் அமைந்துள்ள, 100 ஆண்டு பழமையான பழைய அருங்காட்சியகம், நகரத்தின் போக்குவரத்து அதிர்வுகளாலும், இட நெருக்கடியாலும், பொருட்களை பாதுகாப்பதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இதற்காக தற்போது பிரமிடுகள் அருகில் ஒரு விசாலமான இடத்தில், 'ஜெம்' எனப்படும், 'கிராண்டு எகிப்தியன் மியூசியம்' அமைக்க, 1992ம் ஆண்டு முடிவெடுத்த அரசு அதற்கான இடத்தை ஒதுக்கி அறிவிப்பையும் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த, 2002ம் ஆண்டு அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2005ல் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டன. மேலும், 2012ம் ஆண்டு பிரமாண்ட அருங்காட்சியக கட்டடத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. இருப்பினும் அருங்காட்சியக பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. பல்வேறு அரசியல் குழப்பங்கள், நிதி பற்றாக்குறை, கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களினால் தாமதங்களை சந்தித்த அருங்காட்சியகம், இறுதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
எகிப்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்த அருங்காட்சியம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. புதிய அருங்காட்சியகம் கிசா பிரமிடுகள் மிக அருகில் உள்ளதால் இரண்டையும் சுற்றுலாப் பயணியர் ஒரே நாளில் பார்வையிட முடியும். மேலும், இதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அன்னிய செலாவணியை ஈட்டவும், சுற்றுலாத்துறையை மீட்கவும், ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கவும் எகிப்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
'ஜெம்' என்பது வெறும் காட்சிக்கூடம் மட்டுமல்ல. அது பண்டைய பொருட்களை பாதுகாக்கும் மற்றும் ஆய்வு செய்யும் ஒரு மேம்பட்ட மையம். இது எகிப்தின் பண்டைய பெருமையை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாத்து, உலகின் முன் வைக்கும் ஒரு தேசிய அடையாள சின்னம் ஆகும்.

