/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவுக்கு இது தேவையா... * ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி
/
இந்தியாவுக்கு இது தேவையா... * ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி
இந்தியாவுக்கு இது தேவையா... * ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி
இந்தியாவுக்கு இது தேவையா... * ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி
ADDED : ஜூலை 07, 2024 12:20 AM

ஹராரே: 'டி-20' உலக கோப்பை வென்ற மகிழ்ச்சியை இந்திய அணி கொண்டாடி வருகிறது. மறுபக்கம் ஒலிம்பிக் திருவிழாவுக்கு நமது வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் தேவையில்லாமல் இளம் இந்திய அணியை ஜிம்பாப்வேக்கு அனுப்பியுள்ளனர். நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதுகின்றன. சமீபத்தில் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. முற்றிலும் இளம் அணி களமிறக்கப்பட்டது. முதல் போட்டி நேற்று ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில், 'பவுலிங்' தேர்வு செய்தார். அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரல் அறிமுகமாகினர்.
பிஷ்னோய் அபாரம்
ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் அசத்தியது. கலீல் அஹமது ஓவரில் (5வது) பென்னட், வெஸ்லி மாதவரே தலா இரு பவுண்டரி அடிக்க, 17 ரன் எடுக்கப்பட்டன. பிஷ்னோய் 'சுழலில்' பென்னட் (22) சிக்கினார். முதல் 6 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 40 ரன் எடுத்தது. பிஷ்னோய் வலையில் வெஸ்லியும்(21) அவுட்டானார். பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட கேப்டன் சிக்கந்தர் ராசா, 17 ரன் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் பந்தில் மையர்ஸ்(23) வெளியேறினார். அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் மடாண்டே 3 பவுண்டரி அடித்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது.
இந்தியா சார்பில் பிஷ்னோய் 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்கெட் மடமட
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சில் அதிர்ந்தது. நமது வீரர்கள் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்தனர். பென்னட் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா 'டக்' அவுட்டானார். சென்னை கேப்டன் ருதுராஜ் (7) ஏமாற்றினார். சத்தாரா ஓவரில் ரியான் பராக் (2), ரிங்கு சிங்(0) நடையை கட்ட, இந்திய அணி 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 22 ரன் எடுத்து தத்தளித்தது. ஜுரெல்(6) நிலைக்கவில்லை. சிக்கந்தர் ராசா பந்தில் சுப்மன் (31) போல்டாக, நம்பிக்கை தகர்ந்தது. அவேஷ் கான் 16 ரன் எடுத்தார்.
அனுபவ வாஷிங்டன் சுந்தருக்கு 'பிளான்' பண்ண தெரியவில்லை. ஜோங்வே ஓவரில்(18வது) ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். 19வது ஓவரில் 2 ரன் தான் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. சத்தாரா அருமையாக பந்துவீசினார். வாஷிங்டன், 27 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, சத்தாரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
3
ஜிம்பாப்வேக்கு எதிரான 'டி-20'ல் 2015, 2016ல் தோற்றது இந்தியா. 8 ஆண்டுக்குப் பின் நேற்று மூன்றாவது முறையாக வீழ்ந்தது. இதுவரை மோதிய 9 போட்டியில் இந்தியா 6ல் வென்றது.
12
'டி-20' அரங்கில் இந்திய அணி தொடர்ந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய ஏமாற்றத்தால் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.
100
'டி-20' அரங்கில் நேற்று தனது 100 வது விக்கெட் சாய்த்தார் வாஷிங்டன் சுந்தர். இதுவரை 139 'டி-20' (சர்வதேசம் 44 உட்பட) போட்டியில் 101 விக்கெட் சாய்த்துள்ளார்.
102
நேற்று 102 ரன்னில் சுருண்ட இந்திய அணி, 'டி-20' ல் தனது ஐந்தாவது குறைந்த பட்ச ரன்னை (2008ல் 74, 2016ல் 79, 2015ல் 92, 2016ல் 101, 2024ல் 102) பதிவு செய்தது. தவிர, 8 ஆண்டுக்குப் பின் 'டி-20'ல் குறைந்த ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
'நம்பர்-1'
இந்திய அணி 'டி-20' தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ளது. நேற்று, உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத, 12வது இடத்திலுள்ள ஜிம்பாப்வேயிடம் தோற்றது. ஐ.பி.எல்., உட்பட சர்வதேச அனுபவம் வாய்ந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் என பலர் அணியில் இருந்தும், கடைசியில் தோற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.