சென்னை வாய்ப்பு எப்படி... * பெங்களூருவுடன் பலப்பரீட்சை
சென்னை வாய்ப்பு எப்படி... * பெங்களூருவுடன் பலப்பரீட்சை
ADDED : மே 17, 2024 10:26 PM

பெங்களூரு: ஐ.பி.எல்., 'பிளே ஆப்' சுற்றுக்கு கோல்கட்டா (19), ராஜஸ்தான் (16), ஐதராபாத் (15) அணிகள் சென்று விட்டன. அடுத்த 3 இடங்களில் நடப்பு சாம்பியன் சென்னை (13 போட்டி, 14 புள்ளி, ரன்ரேட் +0.528), டில்லி (14ல் 14, +0.387), பெங்களூரு (13ல் 12) அணிகள் உள்ளன. மோசமான ரன்ரேட் காரணமாக டில்லி (-0.377) வெளியேறிவிட்டது.
இன்று நடக்கும் சென்னை, பெங்களூரு மோதலில் சென்னை வென்றால் 16 புள்ளியுடன் 'பிளே ஆப்' செல்லும். குறைந்த ரன்ரேட் வைத்துள்ள பெங்களூரு அணிக்கு சிக்கல் உள்ளது. ஒருவேளை முதலில் பேட் செய்து பெங்களூரு 200 ரன் எடுத்தால், 18 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வெல்ல வேண்டும்.
அல்லது சென்னை அணி 200 ரன் எடுத்தால், பெங்களூரு அணி, 11 பந்து மீதமுள்ள (18.1 ஓவர்) நிலையில் இலக்கை எட்ட வேண்டும். அப்போது இரு அணிகளும் தலா 14 புள்ளி பெறும். அதிக ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு 'பிளே ஆப்' செல்லலாம்.
மழை வந்தால்...
பெங்களூருவில் இன்று மதியம் 1:00 மணி முதல் இடியுடன் மழை பெய்யும். போட்டி நேரத்தில் (இரவு 7:00-11:00 மணி) மழை வர 67- 84 சதவீத வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் போட்டி ரத்தானால் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது சென்னை 15 புள்ளியுடன் 'பிளே ஆப்' செல்லும். பெங்களூரு (13) வெளியேறும்.
