நள்ளிரவில் திக்... திக்... திக் * சென்னை கனவு தகர்ந்தது
நள்ளிரவில் திக்... திக்... திக் * சென்னை கனவு தகர்ந்தது
ADDED : மே 19, 2024 12:46 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில் இருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன் சென்னை அணி. நேற்று பெங்களூருவிடம் 27 ரன்னில் தோற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி குறைந்த பட்சம் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என களமிறங்கியது.
டுபிளசி அரைசதம்
பெங்களூரு அணிக்கு கோலி, கேப்டன் டுபிளசி ஜோடி துவக்கம் கொடுத்தது. 3 ஓவரில் 31/0 ரன் எடுத்த போது மழையால்போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியது. கோலி, 47 ரன்னில் அவுட்டானார்.டுபிளசி(54) அரைசதம் அடித்தார்.ரஜத் படிதர் 41 ரன் எடுக்க, தினேஷ் கார்த்திக் (14), மேக்ஸ்வெல் (16) சற்று உதவினர்.பெங்களூரு அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.
ரச்சின் ஆறுதல்
சென்னை அணி 20 ஓவரில் 201 ரன் எடுத்தால், 'பிளே ஆப்' செல்லலாம் என களமிறங்கியது. மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்தில் ருதுராஜ், 'டக்' அவுட்டானார். மிட்செல் (4) ஏமாற்ற, ரகானே 33 ரன் எடுத்தார். ரச்சின் ரவிந்திரா, 61 ரன்னில் வீணாக ரன் அவுட்டானார். துபே (7 ரன், 15 பந்து) பந்துகளை வீணடித்தார். சான்ட்னர் (3), டுபிளசியின் அசத்தலான 'கேட்ச்சில்' வீழ்ந்தார்.
கடைசி ஓவரில் சென்னை 35 ரன் எடுத்தால் வெற்றி, 17 ரன் எடுத்து தோற்றால் 'பிளே ஆப்' செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட, நள்ளிரவில் 'திக்... திக்' என ரசிகர்கள் நெஞ்சம் பதறியது.
யாஷ் தயாள் பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி (25), அடுத்த பந்தில் அவுட்டானார். 3, 4வது பந்தில் ஷர்துல் 1 ரன் மட்டும் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட ஜடேஜா பந்தை வீணடித்தார். முடிவில் 7 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 191/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஜடேஜா (42) அவுட்டாகாமல் இருந்தார்.
கடைசி போட்டியா
சென்னை அணி முன்னாள் கேப்டன் தோனி. இத்தொடருடன் ஐ.பி.எல்., அரங்கில் இருந்து விடைபெறுவார் என நம்பப்படுகிறது. தற்போது சென்னை 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் பெங்களூருவுக்கு எதிராக களமிறங்கியது, தோனியின் கடைசி ஐ.பி.எல்., போட்டியாக இருக்கலாம்.
6
பெங்களூரு அணி முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றது. பின் பஞ்சாப்பை வென்றது. அடுத்து தொடர்ந்து 6 போட்டியில் தோற்றது. கடைசி 6 போட்டியில் தொடர்ந்து வென்றது. சென்னை (14 புள்ளி, 0.392), பெங்களூரு (14, 0.459) அணிகள் தலா 14 புள்ளி பெற்ற போதும், விட அதிக ரன்ரேட் காரணமாக பெங்களூரு 'பிளே ஆப்' சென்றது.
