/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி அணி அசத்தல் * வீழ்ந்தது ராஜஸ்தான்
/
டில்லி அணி அசத்தல் * வீழ்ந்தது ராஜஸ்தான்
UPDATED : மே 07, 2024 11:48 PM
ADDED : மே 07, 2024 10:00 PM

புதுடில்லி: டில்லி அணி 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
டில்லியில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.
பிரேசர் அபாரம்
டில்லி அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஜோடி துவக்கம் கொடுத்தது. அவேஷ் கானின் ஓவரில் (4 வது) 4 பவுண்டரி, 2 சிக்சர் (4, 4, 4, 6, 4, 6) என பிரேசர் அடித்து மிரட்ட, 28 ரன் எடுக்கப்பட்டன. 19 வது பந்தில் அரைசதம் எட்டினார் பிரேசர். முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 60 ரன் சேர்த்த நிலையில், பிரேசர் (50) அஷ்வின் 'சுழல்' வலையில் சிக்கினார்.
அபிஷேக் அரைசதம் எட்டினார். மறுபக்கம் அஷ்வின் பந்தில், அக்சர் படேல் (15), அபிஷேக் (65) அவுட்டாகினார். ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை.
சகால் வீசிய 18 வது ஓவரில் ஸ்டப்ஸ், 4, 4, 2, 6 என அடிக்க, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. குல்பதீனை (19), பவுல்ட் அவுட்டாக்கினார். 20 வது ஓவரின் முதல் இரு பந்தில் இரண்டு சிக்சர் அடித்த ஸ்டப்ஸ் (41), அடுத்த பந்தில் வீழ்ந்தார். கடைசி பந்தில் ராசிக் (6) அவுட்டானார். டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன் குவித்தது. அஷ்வின் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
சாம்சன் அரைசதம்
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் (4), பட்லர் (19) ஜோடி துவக்கம் தந்தது. ரியான் பராக் (27) ஏமாற்றிய போதும். சாம்சன் அரைசதம் விளாசினார். இவர் 46 பந்தில் 86 ரன் எடுத்த போது, முகேஷ் குமார் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் 'கேட்ச்' ஆனார்.
இதன் பின் போட்டி டில்லிக்கு சாதகமாக திரும்பியது. ஷுபம் துபே (25), பெரெய்ரா (1), அஷ்வின் (2) அடுத்தடுத்து கிளம்பினர். முகேஷ் வீசிய 20 வது ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட, 8 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 201/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
350
'டி-20' கிரிக்கெட்டில் 350 வது விக்கெட் சாய்த்தார் சகால். இந்த மைல்கல்லை எட்டிய 5வது பவுலர் ஆனார். ரஷித் கான் (572, ஆப்கன்), சுனில் நரைன் (549, வெ.இண்டீஸ்), இம்ரான் தாகிர் (502, தெ.ஆப்.,), சாகிப் அல் ஹசன் (482, வங்கதேசம்) 'டாப்-4' ஆக உள்ளனர்.
3
ஐ.பி.எல்., அரங்கில் 20க்கும் குறைவான பந்துகளில் அதிகமுறை அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் பிரேசர். இந்த சீசனில் இவர் 15, 15, 19 வது பந்தில் என மூன்று முறை அரைசதம் விளாசினார். ஜெய்ஸ்வால் (2), நிகோலஸ் பூரன் (2), இஷான் கிஷான் (2), சுனில் நரைன் (2) உள்ளிட்டோர் அடுத்த இடத்தில் உள்ளனர்.