/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கடைசி ஓவரில் மும்பை வெற்றி * பஞ்சாப் போராட்டம் வீண்
/
கடைசி ஓவரில் மும்பை வெற்றி * பஞ்சாப் போராட்டம் வீண்
கடைசி ஓவரில் மும்பை வெற்றி * பஞ்சாப் போராட்டம் வீண்
கடைசி ஓவரில் மும்பை வெற்றி * பஞ்சாப் போராட்டம் வீண்
ADDED : ஏப் 19, 2024 12:06 AM

மொகாலி: ஐ.பி.எல்., போட்டியில் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போராடிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் வீழ்ந்தது.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின.
சூர்யா விளாசல்
மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷான் (8) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. சூர்யகுமார், 34 வது பந்தில் அரைசதம் கடந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் பங்கேற்ற நான்காவது போட்டியில் இவர் அடித்த இரண்டாவது அரைசதம் இது.
இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது ரோகித் (36), கர்ரான் பந்தில் அவுட்டானார். போட்டியின் 16 வது ஓவரை ரபாடா வீசினார். இம்முறை சூர்யகுமார் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன் குவித்தார். இவர், 53 பந்தில் 78 ரன் எடுத்து, கர்ரான் 'வேகத்தில்' வீழ்ந்தார்.
ஹர்ஷல் நம்பிக்கை
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வந்த வேகத்தில், கர்ரான் பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். இவருடன் இணைந்த திலக் வர்மா, ஹர்ஷல் படேல் பந்தில் சிக்சர் விளாசினார். பாண்ட்யா 10 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். கர்ரான் வீசிய 18 வது ஓவரில், 2 பவுண்டரி, 1 சிக்சர் என அடித்தார் டிம் டேவிட்.
கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் படேல், 2வது பந்தில் டேவிட்டை (14) அவுட்டாக்கினார். 5வது பந்தில் ஷெப்பர்டை (1) திருப்பி அனுப்பினார். கடைசி பந்தில் நபி (0) ரன் அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. திலக் வர்மா (34), அவுட்டாகாமல் இருந்தார்.
அஷுதோஷ் ஆறுதல்
பஞ்சாப் அணிக்கு கர்ரான் (6), பிரப்சிம்ரன் (0), அறிமுக வீரர் ரூசோவ் (1), லிவிங்ஸ்டன் (1) என 'டாப் ஆர்டர்' வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். ஹர்பிரீத் சிங் (13), ஜிதேஷ் சர்மா (9) நிலைக்கவில்லை. சஷாங்க் சிங் (41), அஷுதோஷ் சர்மா, இணைந்து போராடினர். 16 வது ஓவரை வீசினார் ஆகாஷ் மத்வால். இதில் அஷுதோஷ் 3 சிக்சர் விளாச, 24 ரன் எடுக்கப்பட்டன. இவர், 23 வது பந்தில் அரைசதம் கடந்தார்.
மீண்டது மும்பை
கடைசி 24 பந்தில் 28 ரன் தேவைப்பட்டன. பும்ரா வீசிய 17 வது ஓவரில் 3 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. அடுத்து கோயட்சீ ஓவரில் அஷுதோஷ் (61) அவுட்டாக, 2 ரன் மட்டும் கிடைத்தன. பாண்ட்யா பந்தில் ஹர்பிரீத் (21) அவுட்டாக, மும்பை பக்கம் வெற்றி திரும்பியது. கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. 'வைடாக' வீசப்பட்ட முதல் பந்தில் ரபாடா (8) ரன் அவுட்டானார். பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.
25
நடப்பு ஐ.பி.எல்., தொடரில் இதுவரை நடந்த போட்டி முடிவில் 'பவர் பிளே' ஓவர்களில் அதிக சிக்சர் அடித்த அணி வரிசையில் மும்பை (25 சிக்சர்) முதலிடம் பிடித்தது. ஐதராபாத் (21), கோல்கட்டா (20), டில்லி (20) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
224
மும்பை அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் ரோகித் சர்மா. இவர் 205 போட்டியில் 224 சிக்சர் அடித்துள்ளார். இந்த வரிசையில் போலார்டு (189ல் 223), ஹர்திக் பாண்ட்யா (99ல் 104) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
250
ரோகித் சர்மா நேற்று தனது 250 வது ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றார். தோனிக்கு (250) அடுத்து இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார் ரோகித். தினேஷ் கார்த்திக் (249), கோலி (244) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
6500
பஞ்சாப் அணிக்கு எதிராக 36 ரன் எடுத்த ரோகித் சர்மா, ஐ.பி.எல்., அரங்கில் 6500 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். அதிக ரன் எடுத்த வீரர்களில் நான்காவது இடம் பிடித்த இவர், 250 போட்டியில் 6508 ரன் எடுத்துள்ளார். கோலி (244ல் 7624), தவான் (222ல், 6769), வார்னர் (182ல் 6563) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

