/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோனி சொல்றார்...ஜடேஜா செய்றார் * சென்னை அணியில் ருசிகரம்
/
தோனி சொல்றார்...ஜடேஜா செய்றார் * சென்னை அணியில் ருசிகரம்
தோனி சொல்றார்...ஜடேஜா செய்றார் * சென்னை அணியில் ருசிகரம்
தோனி சொல்றார்...ஜடேஜா செய்றார் * சென்னை அணியில் ருசிகரம்
ADDED : ஏப் 09, 2024 11:43 PM

சென்னை: ''நாடகத்தை இயக்கியது தோனி. அதன்படி தோனிக்கு முன்னதாக களமிறங்குவது போல ஜடேஜா நடித்தார்,'' என சென்னை வீரர் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணியை(137/9), சென்னை(141/3) வென்றது. இதில் 'சுழலில்' அசத்திய ரவிந்திர ஜடேஜா, 2 கேட்ச், 3 விக்கெட் வீழ்த்தி, சென்னை வெற்றிக்கு வித்திட்டார். ஐ.பி.எல்., வரலாற்றில் 100 'கேட்ச்', 1000 ரன், 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் 231 போட்டியில் 2776 ரன், 100 'கேட்ச்', 156 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இப்போட்டியின் கடைசி கட்டத்தில் ஷிவம் துபே அவுட்டான போது, சென்னை வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. அப்போது 'தல' தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் காலில் 'பேடு' அணிந்து கையில் 'பேட்' உடன் ஜடேஜா வர, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை ஜாலிக்காக செய்த இவர், சிரித்துக் கொண்டே மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். உடனே தோனி கம்பீரமாக வெளியே வந்தார். மைதானத்திற்குள் தோனி நுழைந்ததும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. கேப்டன் ருதுராஜ்(67), தோனி(1) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இது குறித்து சென்னை வீரர் துஷார் தேஷ்பாண்டே கூறுகையில்,''தோனி தான் அனைத்தையும் திட்டமிட்டார். 'நீ முன்னதாக செல். ஆனால், உனக்கு முன்பாக நான் தான் பேட் செய்வேன்,' என ஜடேஜாவிடம் கூறினார். இதற்கு ஏற்ப ஜடேஜாவும் முன்னதாக களமிறங்குவது போல நடித்தார்,''என்றார்.
ரசிகர்களுக்காக...
ஜடேஜா கூறுகையில்,''பணம் கொடுத்து போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கவே இப்படி செய்தோம். பொதுவாக எனது 'கேட்ச்' எண்ணிக்கையை கணக்கிடுவதில்லை. 100 'கேட்ச்' என்ற மைல்கல்லை எட்டியது நல்ல விஷயம். சேப்பாக்கம் மைதானத்தில் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டேன். சரியான இடத்தில் துல்லியமாக பந்துவீசுவதே எனது திட்டம். இதன்படி பந்துவீசியதால், சாதிக்க முடிந்தது,''என்றார்.
2022ல் சொன்ன ரகசியம் என்ன...
சென்னை கேப்டன் ருதுராஜ் கூறுகையில்,''கேப்டன் பதவி தொடர்பாக ஒரே ஒரு முறை தோனி பேசினார். 2022ல் பயிற்சியின் போது,'அணியை வழிநடத்தும் வாய்ப்பு உனக்கு வரலாம். அதற்கு தயாராக இரு,' என்றார். அப்போதே தயாராகிவிட்டேன். நான் நானாகவே இருப்பேன். சொந்தமாக முடிவுகளை எடுப்பேன். சக வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பேன். கேப்டன் என்ற முறையில் எனது பேட்டிங் அணுகுமுறையில் மாற்றம் இருக்காது. கோல்கட்டாவுக்கு எதிராக கடைசி வரை நிலைத்து நின்று வெற்றி தேடித் தர வேண்டுமென நினைத்தேன். கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே மனநிலையில் தான் இருந்திருப்பேன். சென்னை அணியின் வெற்றிக் கலாசாரம் தொடர விரும்புகிறேன்,''என்றார்.
'கடவுளிடம்' இருந்து...
இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறுகையில்,''ரசிகர்கள் 'கடவுளாக' போற்றும் தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார் ருதுராஜ். அணியில் தோனியும் உள்ளார். இவருக்கு கேப்டனாக செயல்படுவது கடினம். போட்டியில் ருதுராஜ் முழுகட்டுப்பாடு செலுத்தி நான் பார்க்கவில்லை. இவர் அதிக ரன் குவித்து, வெற்றி தேடித் தரும் பட்சத்தில் ஆதிக்கம் செலுத்தலாம்,''என்றார்.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மார்கன் கூறுகையில்,''கோல்கட்டாவுக்கு எதிராக ருதுராஜ் அரைசதம் கடந்தார். இது வரும் போட்டிகளில் கேப்டனாக உறுதியான முடிவுகளை எடுக்க உதவும்,''என்றார்.
'தல' தந்த 'அட்வைஸ்'
தோனியை கோல்கட்டாவின் இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்(ஆப்கானிஸ்தான்) சந்தித்தார். இவருக்கு தனது கையெழுத்திட்ட 'பேட்' ஒன்றை பரிசாக வழங்கினார் தோனி. 'கடந்த காலத்தை நினைத்து கவலைப்படாதே. எதிகாலத்தை பற்றி சிந்திக்காதே. நிகழ்காலத்தை கொண்டாடி, மகிழ்ச்சியாக இருக்கவும்' என தோனி 'அட்வைஸ்' செய்ததாக குர்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

