/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை 'சிங்கம்' ஷிவம் துபே * குஜராத் அணியை வீழ்த்தியது
/
சென்னை 'சிங்கம்' ஷிவம் துபே * குஜராத் அணியை வீழ்த்தியது
சென்னை 'சிங்கம்' ஷிவம் துபே * குஜராத் அணியை வீழ்த்தியது
சென்னை 'சிங்கம்' ஷிவம் துபே * குஜராத் அணியை வீழ்த்தியது
ADDED : மார் 26, 2024 11:58 PM

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 63 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. சிக்சர் மழை பொழிந்த ஷிவம் துபே அரைசதம் விளாசினார்.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, குஜராத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் 'சுழல்' தீக்சனா நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. முதலில் களமிறங்கிய குஜராத் 'லெவன்' அணியில் சாய் கிஷோர், விஜய் சங்கர் என இரு தமிழக வீரர்கள் இடம் பெற்றனர்.
ரச்சின் நம்பிக்கை
சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவிந்திரா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஓமர்சாய் வீசினார். இதன் கடைசி பந்தில் ருதுராஜ் கொடுத்த எளிய 'கேட்ச்' வாய்ப்பை, சாய் கிஷோர் நழுவவிட்டார். உமேஷ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசி அதிரடியை துவக்கினார் ரச்சின்.
தொடர்ந்து ஓமர்சாய் ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார் ரச்சின். போட்டியின் ஐந்தாவது ஓவரை வீசினார் ஓமர்சாய். இதன் முதல் பந்தை ருதுராஜ், பவுண்டரிக்கு அனுப்பினார். மறுபக்கம் புயல் வேகத்தில் ரன் சேர்த்த ரச்சின், 3, 5வது பந்தில் ஒரு சிக்சர், பவுண்டரி என அடிக்க, இந்த ஓவரில் 17 ரன் எடுக்கப்பட்டன. சென்னை அணி 5 ஓவரில் 58/0 ரன் எடுத்தது.
சபாஷ் சுப்மன்
இந்த ஜோடியை பிரிக்க அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானை அழைத்தார் சுப்மன். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. ரஷித் கான் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரச்சின். இரண்டாவது பந்தை ரச்சின் (46 ரன், 20 பந்து) கோட்டைவிட, விக்கெட் கீப்பர் சகா 'ஸ்டம்பிங்' செய்ய, சோகத்துடன் திரும்பினார்.
மனம் தளராத ருதுராஜ், இதே ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய போட்டியின் 10 வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஸகோரை உயர்த்தினார் ருதுராஜ். சென்னை அணி 10 ஓவரில் 104/1 ரன் எடுத்தது.
துபே அரைசதம்
சற்று தடுமாறிய ரகானே (12), சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். பின் வந்த ஷிவம் துபே, சாய் கிஷோர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். இந்நிலையில் ருதுராஜ் (46), ஜான்சன் பந்தில் அவுட்டானார். அடுத்து மிட்செல், ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். ரஷித் கானின் பந்துகளை மிட்செல் பவுண்டரி அடிக்க, துபே சிக்சருக்கு விரட்டினார்.
மோகித் சர்மா பந்தில் சிக்சர் அடித்த துபே (51 ரன், 5 சிக்சர்), 22 வது பந்தில் அரைசதம் கடந்தார். ஐ.பி.எல்., தொடரில் 7வது அரைசதம் அடித்த இவர், ரஷித் பந்தில் அவுட்டானார். வந்த வேகத்தில் ரஷித் ஓவரில் 2 சிக்சர் அடித்த சமீர் ரிஸ்வி (14) மோகித் பந்தில் வீழ்ந்தார். மிட்செல் (24) ரன் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது. ஜடேஜா (7) அவுட்டாகாமல் இருந்தார்.
சகார் கலக்கல்
குஜராத் அணிக்கு சகா (8), சுப்மன் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. சகார் 'வேகத்தில்' சகா (21) வெளியேறினார். மிட்செல் பந்தில் விஜய் சங்கர் (12) தோனியின் துடிப்பான 'கேட்ச்சில்' திரும்பினார். அடுத்து மில்லர் (21) ரகானேயிடம் 'பிடி' கொடுத்தார். 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கி போராடிய சாய் சுதர்சன் 37 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஓமர்சாய் (11), டிவாட்யா (6) கைவிட, குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
சென்னை சார்பில் சகார் 2, முஸ்தபிஜுர் 2, தேஷ்பாண்டே 2 விக்கெட் சாய்த்தனர்.
தோனி 'கேட்ச்'
மிட்செல் வீசிய பந்தை (7.3 வது ஓவர்) அடித்தார் விஜய் சங்கர். இதை அப்படியே வலது புறமாக அந்தரத்தில் பாய்ந்து 'கேட்ச்' செய்து அசத்தினார் விக்கெட் கீப்பர் தோனி 42. அடுத்து தேஷ்பாண்டே பந்தை (11.5வது) விளாசினார் மில்லர். 'மிட் விக்கெட்' பகுதியில் தாழ்வாக சென்ற பந்தை, ரகானே 35, அப்படியே முன்னோக்கி 'டைவ்' அடித்து 'கேட்ச்' செய்தார். இரு 'சீனியர்' வீரர்களும் பீல்டிங்கில் துடிப்பாக செயல்பட்டது ரசிகர்களை கவர்ந்தது.
மூன்றாவது முறை
நேற்று ருதுராஜ், ரச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக சென்னை துவக்க ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. முன்னதாக 2023 சீசனில் ருதுராஜ், ரச்சின் ஜோடி 87, 74 ரன் எடுத்திருந்தது.

