தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இனிமை நிறைந்த 'உலகம்' இருக்கு ... இதிலே கார்த்திக்கு இடம் இருக்கா

இனிமை நிறைந்த 'உலகம்' இருக்கு ... இதிலே கார்த்திக்கு இடம் இருக்கா

இனிமை நிறைந்த 'உலகம்' இருக்கு ... இதிலே கார்த்திக்கு இடம் இருக்கா


ADDED : ஏப் 17, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில் தினேஷ் கார்த்திக் துாள் கிளப்புகிறார். இவரது சூப்பர் 'பார்ம்' தொடரும் பட்சத்தில், 'டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்.

பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஐதராபாத்திடம் (287/3), பெங்களூரு அணி(262/7) வீழ்ந்தது. இதில் பெங்களூரு அணிக்காக விளையாடிய விக்கெட்கீப்பர்/பேட்டர் தினேஷ் கார்த்திக் 38, மனம் தளராமல் போராடினார். நடராஜன் வீசிய பந்தை 108 மீ., துாரத்திற்கு பறக்கவிட்டு, இத்தொடரின் இமாலய சிக்சரை பதிவு செய்தார். 35 பந்தில் 83 ரன்(5 பவுண்டரி, 7 சிக்சர், ஸ்டிரைக் ரேட்: 237.14) விளாசினார். இதுவரை 7 போட்டிகளில் 226 ரன்(சராசரி 75.33, ஸ்டிரைக் ரேட்: 205) எடுத்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான(ஜூன் 1-29) இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளார்.

ரோகித் பாராட்டு

ஏற்கனவே கார்த்திக் ஆட்டத்தை இந்திய கேப்டன் ரோகித் சர்மா(மும்பை) பாராட்டினார். வான்கடே மைதானத்தில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 23 பந்தில் 53 ரன் விளாசினார் கார்த்திக். அப்போது ரோகித்,''சபாஷ் கார்த்திக். உங்களது மனம் உலக கோப்பை மீது உள்ளது. இதற்கான அணியில் இடம் பிடிக்க சிறப்பாக முயற்சிக்கிறீர்கள்,' என்று சொன்னது 'ஸ்டம்ப்ஸ்' 'மைக்'கில் பதிவானது. ரோகித் வார்த்தைகளை 'சீரியசாக' எடுத்துக் கொண்டுள்ள தமிழகத்தின் கார்த்திக், ஐ.பி.எல்., தொடரில் சிறந்த 'பினிஷராக' ஜொலிக்கிறார். இவருக்கு ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், ராகுல், இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா போன்ற இளம் கீப்பர்/பேட்டர்கள் போட்டியாக உள்ளனர்.

வெற்றி அவசியம்

பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறுகையில்,''தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு உண்டு. எஞ்சிய போட்டிகள் எங்களுக்கு அரையிறுதி போன்றவை. அனைத்திலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,''என்றார்.

விரக்தியில் மேக்ஸ்வெல் விலகல்

ஐ.பி.எல்., தொடரில் இம்முறை பெங்களூரு அணிக்கு 'டாப்-ஆர்டரில்' கோலி(361 ரன்) மட்டுமே கைகொடுக்கிறார். முக்கிய வீரரான மேக்ஸ்வெல்(ஆஸி.,) ஆட்டம் எடுபடவில்லை. 6 போட்டிகளில் 32 ரன்(0, 3, 28, 0, 1, 0, சராசரி 5.33, ஸ்டிரைக் ரேட்: 94.11) மட்டுமே எடுத்துள்ளார். இவர், ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் விரல் காயத்தால் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், தானாகவே விலகியதாக மேக்ஸ்வெல் விளக்கம் அளித்துள்ளார். இவர் கூறுகையில்,''மும்பைக்கு எதிரான போட்டிக்கு பின் கேப்டன் டுபிளசி, பயிற்சியாளர்களிடம் பேசினேன். எனக்கு பதில் வேறு ஒரு வீரரை தேர்வு செய்யும்படி கூறினேன். எனக்கு மனது, உடல் அளவில் நீண்ட 'பிரேக்' தேவைப்படுகிறது. மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால், அணிக்கு திரும்புவேன்,'' என்றார்.

அணியை விற்கலாமே...

ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியால் இதுவரை கோப்பை வெல்ல முடியவில்லை. இம்முறை 7 போட்டியில் 6 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இது குறித்து இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி வெளியிட்ட செய்தியில்,'விளையாட்டு, ஐ.பி.எல்., ரசிகர்கள், வீரர்களின் நலனை கருதி பெங்களூரு அணியை பி.சி.சி.ஐ., விற்பனை செய்யலாம். விளையாட்டின் மீது அக்கறை கொண்ட புதிய உரிமையாளர் வசம் ஒப்படைக்கலாம்,' என தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அணியின் உரிமையாளராக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் உள்ளது. பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி கோப்பை வென்றது. ஆண்கள் அணி தான் சொதப்புகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us