ADDED : மார் 21, 2024 11:01 PM

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் சென்னை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது. புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணி, பெங்களூருவை சந்திக்கிறது.
சென்னை அணிக்காக ஐந்து முறை கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி, இத்தொடருடன் விடைபெற காத்திருக்கிறார். இதனால் துவக்க வீரர் ருதுராஜ், புதிய கேப்டனாக களமிறங்குகிறார். சீனியர் வீரர்களை அரவணைத்து செல்ல வேண்டும்.
துவக்க வீரர் கான்வே பெருவிரல் காயத்தால் பங்கேற்க முடியாத நிலையில், ரச்சின் ரவிந்திரா, ருதுராஜுடன் இணைந்து துவக்கம் தரலாம். உலக கோப்பை தொடரில் அசத்திய ரச்சின், பவுலராகவும் அசத்துகிறார். சமீபத்தில் நியூசிலாந்தின் சிறந்த வீரர் விருது வென்ற இவரது அனுபவம் சென்னைக்கு கைகொடுக்கலாம். 'மிடில் ஆர்டரில்' அனுபவ வீரர் ரகானேயுடன், புதிய வரவு டேரில் மிட்செல் பலம் சேர்க்கிறார்.
ஜடேஜா நம்பிக்கை
'சீனியர்' சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா, ஷிவம் துபே 'ஆல் ரவுண்டராக' அசத்த காத்திருக்கின்றனர். ரஞ்சி கோப்பை தொடரில் கைகொடுத்த ஷர்துல் தாகூர், மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவது கூடுதல் பலம். பந்துவீச்சில் பதிரானா இல்லாத நிலையில், தீபக் சகார், தேஷ் பாண்டேவை சென்னை அதிகம் நம்பியுள்ளது. சுழலில் தீக்சனா மீண்டு வர முயற்சிக்கலாம்.
பேட்டிங் பலம்
பெங்களூரு அணி கேப்டன் டுபிளசி, நட்சத்திர வீரர் கோலி என இருவரும் இருமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் களமிறங்குகின்றனர். புதிய வரவு கேமரான் கிரீன், உலக கோப்பை தொடரில் மிரட்டிய மேக்ஸ்வெல், பேட்டிங் மட்டுமன்றி, பவுலிங்கிலும் உதவுவர். தனது கடைசி தொடரில் பங்கேற்கும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், டாப்ளேயும் கைகொடுக்க உள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் சர்வதேச அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் என பலர் பலம் சேர்த்தாலும், கடைசி கட்ட ஓவர்களில் அசத்தும் திறமை பெற்றவர்கள் இல்லாதது பலவீனம். சுழலில் மேக்ஸ்வெல்லை மட்டும் நம்ப வேண்டும்.
சேப்பாக்கம் கோட்டை
சென்னை அணி 2008ல் நடந்த முதல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூருவிடம் தோற்றது. இதன் பின் 2019 வரை சென்னை அணி மோதிய 7 போட்டிகளிலும் பெங்களூருவை வென்றது.
21
இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 21, பெங்களூரு 10ல் வென்றன. கடைசியாக மோதிய 5 போட்டியில் சென்னை 4, பெங்களூரு ஒன்றில் வென்றன.
இரண்டு 'பவுன்சர்'
ஐ.பி.எல்., தொடரில் இம்முறை ஓவருக்கு தலா 2 பவுன்சர் வீச பவுலர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஒரு பவுன்சர் மட்டும் வீசப்படுகிறது.
* தவிர 'டி.ஆர்.எஸ்.,' முறையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' (எஸ்.ஆர்.எஸ்.,) முறை கொண்டு வரப்படுகிறது. இதன் படி, அதிநவீன 8 'ஹாக் ஐ' கேமரா மைதானத்தை சுற்றிலும் பொருத்தப்படும். இதில் எடுக்கப்படும் போட்டோக்களை கொண்டு, ரன் அவுட், எல்.பி.டபிள்யு., 'கேட்ச்' என பல்வேறு முடிவுகளை அம்பயர்கள் அறிவிப்பர்.
