/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் * ரூ. 641.5 கோடி தயார்
/
ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் * ரூ. 641.5 கோடி தயார்
ADDED : நவ 04, 2024 10:58 PM

புதுடில்லி: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் ரியாத்தில் நவ. 24-25ல் நடக்க உள்ளது.
இந்தியாவில் 18 வது ஐ.பி.எல்., சீசன் 2025ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 5 அல்லது 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு மற்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன் படி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ், லோகேஷ் ராகுல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரை அந்தந்த அணிகள் கழற்றி விட்டனர். இவர்களுக்கான 'மெகா' ஏலம், குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில்,'' வீரர்கள் ஏலம் நவ. 24-25 என இரண்டு நாள், சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடக்க உள்ளது. இதுகுறித்து அணி உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மொத்தம் எவ்வளவு
இம்முறை ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்திற்காக ரூ. 120 கோடி வரை (மொத்தம் ரூ. 1200 கோடி) செலவிடலாம். 10 அணிகளில் இதுவரை தக்கவைக்கப்பட்ட 46 வீரர்களுக்கு மட்டும் ரூ. 558.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வரும் ஏலத்தில் 70 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 204 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்காக ரூ. 641.4 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி ரூ. 110.5 கோடி கையிருப்பு வைத்துள்ளது.
அடுத்து பெங்களூரு (ரூ. 83 கோடி), டில்லி (ரூ. 73 கோடி), குஜராத் (ரூ. 69 கோடி), லக்னோ (ரூ. 69 கோடி), சென்னை (ரூ. 65 கோடி) அணிகள் அதிக இருப்பு வைத்துள்ளன.
இதில் கோல்கட்டா (ரூ. 51 கோடி), மும்பை (ரூ. 45 கோடி), ஐதராபாத்துக்கு (ரூ. 45 கோடி) அடுத்து, குறைந்த அளவாக ராஜஸ்தான் ரூ. 41 கோடி வைத்துள்ளது.