/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெளியேறியது லக்னோ அணி * 18 பந்தில் அபிஷேக் அரைசதம்
/
வெளியேறியது லக்னோ அணி * 18 பந்தில் அபிஷேக் அரைசதம்
வெளியேறியது லக்னோ அணி * 18 பந்தில் அபிஷேக் அரைசதம்
வெளியேறியது லக்னோ அணி * 18 பந்தில் அபிஷேக் அரைசதம்
ADDED : மே 20, 2025 12:01 AM

லக்னோ: பிரிமியர் போட்டியில் ஐதராபாத் அணியிடம், 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த லக்னோ அணி, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது.
லக்னோவில் நடந்த பிரிமியர் தொடர் லீக் போட்டியில் லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார். இதில் வென்றால் மட்டுமே 'பிளே ஆப்' வாய்ப்பை தக்க வைக்கலாம் என்ற நிலையில் லக்னோ களமிறங்கியது.
மார்ஷ் விளாசல்
லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், மார்க்ரம் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. கம்மின்ஸ் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கைத் துவக்கினார் மார்ஷ். அடுத்து வந்த ஹர்ஷல், ஈஷான் பந்துகளிலும் சிக்சர் அடித்த மார்ஷ், 28 பந்தில் 50 ரன்னை எட்டினார். இத்தொடரில் இவர் அடித்த 5வது அரைசதம் இது. மறுபக்கம் ஐதராபாத் அணியின் பீல்டிங் மோசமாக அமைய, லக்னோ அணி 10 ஓவரில் 108/0 ரன் குவித்தது.
மார்க்ரம் அரைசதம்
போட்டியின் 11வது ஓவரை வீசிய துபே, மார்ஷை (65) அவுட்டாக்கினார். கேப்டன் ரிஷாப் பன்ட் (7) மறுபடியும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். இத்தொடரில் தன் பங்கிற்கு ஐந்தாவது அரைசதம் அடித்தார் மார்க்ரம். இதன் பின் ஐதராபாத் பவுலர்கள் சிறப்பாக செயல்பட, லக்னோ அணியின் ரன் வேகம் குறைந்தது.
15 ஓவரில் 146 ரன் எடுத்தது லக்னோ. ஹர்ஷல் பந்தில் மார்க்ரம் (61) அவுட்டானார். நிக்கோலஸ் பூரன், 26 பந்தில் 45 ரன் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவரில் 205/7 ரன் எடுத்தது.
அபிஷேக் 'சிக்சர்'
ஐதராபாத் அணிக்கு அதர்வா டெய்டு, அபிஷேக் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பிரிமியர் அரங்கில் அறிமுகம் ஆன, லக்னோ அணியின் ரூர்கே 2வது ஓவர் வீசினார். 2, 3 வது பந்தில் பவுண்டரி அடித்த அதர்வா (13), 4வது பந்தில் அவுட்டானார்.
அவேஷ் கான் ஓவரில், அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த அபிஷேக், பிஷ்னோய் ஓவரில் தொடர்ந்து 4 பந்தில் 4 சிக்சர் விளாசினார். 18 பந்தில் அரைசதம் கடந்த அபிஷேக் (59 ரன், 20 பந்து, ஸ்டிரைக் ரேட் 295.00), திக்வேஷ் பந்தில் அவுட்டானார். இஷான் 35 ரன் எடுத்தார்.
கிளாசன் 47 ரன் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் (32) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பிய போதும், ஐதராபாத் அணி 18.2 ஓவரில் 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஒரு இடம்... 2 அணி
பிரிமியர் தொடரின் 'பிளே ஆப்' சுற்றுக்கு குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) அணிகள் முன்னேறின. நேற்று லக்னோ வெளியேறியது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை (12ல் 14), டில்லி (12ல் 13) போட்டியிடுகின்றன. நாளை, இரு அணிகள் மோதும் போட்டி வான்கடேயில் நடக்கிறது. இதில் வெல்லும் அணி 'பிளே ஆப்' செல்லும்.
150 விக்கெட்
நேற்று மார்க்ரமை அவுட்டாக்கிய ஹர்ஷல் படேல், பிரிமியர் அரங்கில் 150 வது விக்கெட்டை பெற்றார். குறைந்த பந்தில் (2381) இந்த இலக்கை அடைந்த முதல் பவுலர் ஆனார். மலிங்கா (2444), சகால் (2543), பிராவோ (2656), பும்ரா (2832) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
* போட்டி அடிப்படையில், மலிங்காவுக்கு (105 போட்டி, 150) அடுத்து, இந்த இலக்கை வேகமாக எட்டிய இரண்டாவது பவுலர் ஆனார் ஹர்ஷல் (112).
12 போட்டி, 137 ரன்
பிரிமியர் அரங்கின் 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட் (ரூ. 27 கோடி) தொடர்ந்து தடுமாறுகிறார். லக்னோ அணிக்காக 12 போட்டியில் 137 ரன் (0, 15, 2, 2, -, 21, 63, 3, 0, 4, 18, 7) மட்டும் எடுத்துள்ளார்.
ஹெட்டுக்கு 'கொரோனா'
ஐதராபாத் அணி துவக்க வீரர் டிராவிஸ் ஹெட். 11 போட்டியில் 280 ரன் எடுத்திருந்தார். போர் பதட்டம் காரணமாக தாயகம் (ஆஸி.,) திரும்பினார். மீதமுள்ள மூன்று போட்டியில் பங்கேற்க இந்தியா வர இருந்த இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஹெட்டுக்குப் பதில் நேற்று, இந்தியாவின் அதர்வா டெய்டு துவக்கம் தந்தார்.
* லக்னோ அணியில் டேவிட் மில்லருக்குப் பதில் நியூசிலாந்தின் ரூர்கே அறிமுகம் ஆனார்.
அபிஷேக்-திக்வேஷ் மோதல்
ஐதராபாத் அணி துவக்க வீரர் அபிஷேக், பிஷ்னோய் ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர் விளாசினார். அடுத்து வந்த திக்வேஷ் ரதி பந்தில் அபிஷேக், ஷர்துல் தாகூரிடம் 'கேட்ச்' கொடுத்தார். அப்போது திக்வேஷ், அபிஷேக்கை பார்த்து 'டாடா' காண்பித்து, வெளியே போ என்றும், பின் வழக்கம் போல, பெயரை எழுதி, சீட்டை கிழிப்பது போல சைகை செய்தார்.
இதைப் பார்த்த அபிஷேக், திக்வேஷை நோக்கி வர, இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அம்பயர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.