/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பெங்களூரு அணி வெற்றி * ரிஷாப் பன்ட் சதம் வீண்
/
பெங்களூரு அணி வெற்றி * ரிஷாப் பன்ட் சதம் வீண்
ADDED : மே 28, 2025 12:28 AM

லக்னோ: பிரிமியர் போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், லக்னோவை வீழ்த்தியது.
பிரிமியர் தொடரின் 18 வது சீசன் தற்போது நடக்கிறது. இதன் கடைசி, 70வது லீக் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஜிதேஷ் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ரிஷாப் அபாரம்
லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், மாத்யூ பிரீட்ஸ்கே (14) ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்து மிட்சல் மார்ஷுடன் இணைந்தார் கேப்டன் ரிஷாப் பன்ட்.
போட்டியின் 10 வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இதில் 6, 4, 4 என அசத்திய ரிஷாப், 29 பந்தில் அரைசதம் எட்டினார். சுயாஷ் பந்தில் சிக்சர் அடித்த மார்ஷ், இத்தொடரில் 7வது அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 77 பந்தில் 152 ரன் சேர்த்த போது, புவனேஷ்வர் பந்தில் அவுட்டானார் மார்ஷ் (67 ரன், 37 பந்து).
ரிஷாப், புவனேஷ்வர் பந்தில் பவுண்டரி அடித்து, சதம் எட்டினார். பூரன் 13 ரன் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவரில் 227/3 ரன் குவித்தது. ரிஷாப் (118 ரன், 61 பந்து), அப்துல் சமத் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோலி அரைசதம்
பெங்களூரு அணிக்கு கோலி, பில் சால்ட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பில் சால்ட் 30 ரன்னில் அவுட்டானார். கோலி 27 பந்தில் அரைசதம் எட்டினார். இத்தொடரில் கோலி அடித்த 8வது அரைசதம் இது. ரூர்கே ஓவரில் ரஜத் படிதர் (14), லிவிங்ஸ்டன் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். 30 பந்தில் 54 ரன் எடுத்த கோலி, அவேஷ் கான் பந்தில் அவுட்டானார்.
அடுத்து இணைந்த ஜிதேஷ் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. ஜிதேஷ் 21 பந்தில் அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் 200/4 ரன் எடுத்தது. அடுத்த 18 பந்தில் 28 ரன் தேவைப்பட்டன. ரூர்கே வீசிய 18வது ஓவரில், ஜிதேஷ் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாச, 21 ரன் எடுக்கப்பட்டன.
கடைசியில் படோனி பந்தில் மீண்டும் ஜிதேஷ் சிக்சர் அடிக்க, பெங்களூரு அணி 18.4 ஓவரில் 230/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜிதேஷ் சர்மா (85 ரன், 33 பந்து, ஸ்டிரைக் ரேட் 257.57), மயங்க் (41) அவுட்டாகாமல் இருந்தனர். பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணியில் சிறந்த 'சேஸ்' இது ஆனது.
இன்று ஓய்வு
பிரிமியர் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. இன்று ஓய்வு நாள். நாளை முதல் 'பிளே ஆப்' சுற்று துவங்குகிறது.
உற்சாகம்
பிரிமியர் அரங்கின் 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட் (ரூ. 27 கோடி). இத்தொடரின் 13 போட்டியில் 151 ரன் (0, 15, 2, 2, -, 21, 63, 3, 0, 4, 18, 7, 16) மட்டும் எடுத்தார். நேற்று கடைசி போட்டியில் சதம் (118) அடித்தார். இந்த உற்சாகத்தில் மைதானத்தில் அப்படியே தலைகீழாக பல்டி அடித்து கொண்டாடினார்.
621 ரன்
லக்னோ அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் மிட்சல் மார்ஷ். இவர் 13 போட்டியில் 627 ரன் எடுத்தார். ராகுல் (2022ல் 616, 2024ல் 520), பூரன் (2025ல் 524) அடுத்து உள்ளனர்.
* லக்னோ அணிக்காக ஒரு சீசனில் அதிக அரைசதம் அடித்த வீரர் மிட்சல் மார்ஷ் (2025ல் 7). இதற்கு முன் 2022ல் ராகுல் 6 அரைசதம் அடித்து இருந்தார்.