/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
லக்னோ 'ஹீரோ' அவேஷ் கான் * கடைசி பந்தில் 'திரில்' வெற்றி
/
லக்னோ 'ஹீரோ' அவேஷ் கான் * கடைசி பந்தில் 'திரில்' வெற்றி
லக்னோ 'ஹீரோ' அவேஷ் கான் * கடைசி பந்தில் 'திரில்' வெற்றி
லக்னோ 'ஹீரோ' அவேஷ் கான் * கடைசி பந்தில் 'திரில்' வெற்றி
ADDED : ஏப் 19, 2025 11:38 PM

ஜெய்ப்பூர்: பிரிமியர் போட்டியில் லக்னோ அணி 2 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரை கலக்கலாக வீசி, 'ஹீரோ' ஆனார் அவேஷ்கான்.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கினார் சூர்யவன்ஷி (2011, மார்ச் 27, பீஹார்). கடந்த 2008ல் பிரிமியர் தொடர் துவங்கியது. இதன் பின் பிறந்து, பிரிமியர் போட்டியில் அறிமுகம் ஆனார் முதல் வீரர் சூர்யவன்ஷி.
மார்க்ரம் அபாரம்
லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், மார்க்ரம் ஜோடி துவக்கம் தந்தது. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார் மார்க்ரம். மீண்டும் வந்த ஆர்ச்சர், தனது 2வது ஓவரின் 2வது பந்தில் மிட்சல் மார்ஷை (4) அவுட்டாக்கினார். மனம் தளராத மார்க்ரம், தீக்சனா வீசிய 4வது ஓவரிலும் இரண்டு பவுண்டரி அடித்தார்.
அபாயகரமான நிக்கோலஸ் பூரன், ஆர்ச்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவர், 6 ரன் எடுத்த போது, ஆர்ச்சர் பந்தில் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை, ஷுபம் துபே நழுவவிட்டார். தொடர்ந்து சந்தீப் சர்மா பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் பூரன் (11). இவரை 'எல்.பி.டபிள்யு' முறையில் வெளியேற்றினார் சந்தீப் சர்மா.
தடுமாறிய ரிஷாப்
அடுத்து வந்த ரிஷாப் பன்ட், ரன் எடுப்பது எப்படி என்பதை மறந்தவர் போல, பேட்டிங்கில் திணறினார். 9 பந்தில் 3 ரன் மட்டும் எடுத்த ரிஷாப், ஒருவழியாக ஹசரங்கா சுழலில், துருவ் ஜுரலிடம் 'பிடி' கொடுத்து திரும்பினார். 'இம்பேக்ட்' வீரராக வந்தார் ஆயுஷ் படோனி.
ஹசரங்கா ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்த மார்க்ரம், அரைசதம் கடந்தார். மறுபக்கம் படோனி, சந்தீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். 45 பந்தில் 66 ரன் எடுத்த போது, மார்க்ரம் (66), ஹசரங்கா பந்தில் அவுட்டானார். தேஷ் பாண்டே பந்தில் பவுண்டரி அடித்து, அரைசதம் எட்டினார் படோனி. இவர் 34 பந்தில் 50 ரன் எடுத்து கிளம்பினார்.
சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில், அப்துல் சமத், 4 சிக்சர் விளாச, 27 ரன் கிடைத்தன. லக்னோ அணி 20 ஓவரில் 180/5 ரன் எடுத்தது. மில்லர் (7), சமத் (30 ரன், 10 பந்து, ஸ்டிரைக் ரேட் 300.00) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் 'சிக்சர்'
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷர்துல் தாகூர் முதல் ஓவர் வீசினார். பிரிமியர் அரங்கில் தான் சந்தித்த பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார் சூர்யவன்ஷி. அடுத்து சந்தித்த அவேஷ் கானின் முதல் பந்திலும் சிக்சர் அடித்தார். மறுபக்கம் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன் (8.4 ஓவர்) சேர்த்த போது சூர்யவன்ஷி (34) அவுட்டானார். நிதிஷ் ராணா (8) ஏமாற்றினார். 52 பந்தில், 74 ரன் எடுத்த ஜெய்ஸ்வால், அவேஷ் கான் பந்தில் போல்டானார். ரியான் பராக் (39) கைகொடுத்தார்.
அவேஷ் கலக்கல்
ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்டன. அவேஷ் கான் பந்துவீசினார். முதல் 2 பந்தில் 3 ரன் கிடைத்தன. அடுத்து ஹெட்மயர் (12) அவுட்டானார். 4வது பந்தை அவேஷ் கான் 'யார்க்கராக' வீச ரன் எடுக்கப்படவில்லை. 5வது பந்தில் 'கேட்ச்' ஆகாமல் தப்பிய ஷுபம் துபே 2 ரன் எடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டன. இம்முறை துபே ஒரு ரன் மட்டும் எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 178/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. துபே (3), ஜுரல் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இளம் வீரர் சூர்யவன்ஷி
பிரிமியர் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன இளம் வீரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி (14 வயது, 23 நாள்). நேற்று ராஜஸ்தான் அணிக்காக 'இம்பேக்ட்' வீரராக விளையாடினார். இதற்கு முன் 2019ல் பெங்களூரு அணியில் பிரயாஸ் ராய் பர்மன், 16 வயது, 157 வது நாளில் அறிமுகம் ஆகியிருந்தார்.
* 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது. இதன் பின் பிறந்து, பிரிமியர் போட்டியில் அறிமுகம் ஆன முதல் வீரர் சூர்யவன்ஷி (2011, மார்ச் 27, பீஹார்).
* பிரிமியர் ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு வாங்கப்பட்டார்.
மீண்டும் ரியான் பராக்
ராஜஸ்தான் அணிக்காக முதல் 3 போட்டியில் கேப்டனாக களமிறங்கியவர் ரியான் பராக். இதனிடையே 'ரெகுலர்' கேப்டன் சாம்சன், வயிற்றுப்பகுதி வலி காரணமாக நேற்று களமிறங்கவில்லை. இதனால் ரியான் பராக் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றார்.
பூரன் 9000 ரன்
லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், நேற்று 1 ரன் எடுத்த போது, 'டி-20' அரங்கில் 9000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 392 போட்டியில் 9010 ரன் எடுத்துள்ளார். கெய்ல் (463ல் 14,562 ரன்), போலார்டு (695ல் 13,537), ஆன்ட்ரி ரசலுக்கு (545ல், 9042) அடுத்து இந்த இலக்கை அடைந்த 4வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் பூரன்.
ரூ. 27 கோடி, 106 ரன்
பிரிமியர் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையுடன் லக்னோ அணியில் இணைந்தார் ரிஷாப் பன்ட் (ரூ. 27 கோடி).
துரதிருஷ்டவசமாக பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறுகிறார். இதுவரை 8 போட்டியில் (0, 15, 2, 2, -, 21, 63, 3), ஒரு அரைசதம் மட்டும் அடித்து, 106 ரன் தான் எடுத்துள்ளார்.

