/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணிக்கு முதல் வெற்றி * நான்கு விக்கெட் சாய்த்தார் அஷ்வனி குமார்
/
மும்பை அணிக்கு முதல் வெற்றி * நான்கு விக்கெட் சாய்த்தார் அஷ்வனி குமார்
மும்பை அணிக்கு முதல் வெற்றி * நான்கு விக்கெட் சாய்த்தார் அஷ்வனி குமார்
மும்பை அணிக்கு முதல் வெற்றி * நான்கு விக்கெட் சாய்த்தார் அஷ்வனி குமார்
ADDED : ஏப் 01, 2025 12:18 AM

மும்பை: அஷ்வனி குமார் 4 விக்கெட் சாய்க்க, மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சரிந்த 'டாப்'
கோல்கட்டா அணிக்கு குயின்டன் டி காக், நரைன் ஜோடி துவக்கம் கொடுத்தது. மும்பை அணிக்காக முதல் ஓவரை வீசினார் டிரன்ட் பவுல்ட், 4வது பந்தில் நரைனை (0) போல்டாக்கினார். அடுத்து வந்த தீபக் சஹார், குயின்டனை (1) வெளியேற்றினார். கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி இணைந்து அணியை மீட்க முயற்சித்தனர்.
சஹார் ஓவரில் ரகுவன்ஷி இரண்டு பவுண்டரி விளாசினார். பவுல்ட் பந்தில் ரஹானே சிக்சர் அடித்தார். இம்மகிழ்ச்சி கோல்கட்டா ரசிகர்களுக்கு சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
அஷ்வனி அபாரம்
அஷ்வனி குமார் வீசிய போட்டியின் 4வது ஓவரில் முதல் பந்தில், ரஹானே (11) அவுட்டானார். வெங்கடேஷ் (3) ஏமாற்ற, கோல்கட்டா அணி 6 ஓவரில் 41/4 ரன் என திணறியது. சற்று ஆறுதல் தந்த ரகுவன்ஷி (26), ஹர்திக் பாண்ட்யா பந்தில் வீழ்ந்தார். தனது இரண்டாவது ஓவரை வீசினார் அஷ்வனி. இதன் 3வது பந்தில் ரிங்கு சிங் (17 ரன், 14 பந்து), 6வது பந்தில் மணிஷ் பாண்டே (19) என இருவரையும் அவுட்டாக்கினார்.
தொடர்ந்து மிரட்டிய அஷ்வனி குமார், ஆன்ட்ரி ரசலை (5 ரன், 11 பந்து), போல்டாக்கி அனுப்பி வைத்தார். கடைசி நேரத்தில் ராமன்தீப் (22) சற்று உதவ, கோல்கட்டா அணி 100 ரன்களை தாண்டியது. 16.2 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டது. அஷ்வனி குமார் 4, தீபக் சஹார் 2 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கு
மும்பை அணிக்கு 'இம்பேக்ட்' வீரர் ரோகித் சர்மா, ரிக்கிள்டன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஹர்ஷித் ராணா பந்தில் ரோகித் சிக்சர் அடித்தார். மறுபக்கம் ஹர்ஷித், ஸ்பென்சர் ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என விளாசினார் ரிக்கிள்டன். இத்தொடரில் முதன் முறையாக பந்து வீசிய ஆன்ட்ரி ரசல், தனது முதல் ஓவரில் ரோகித்தை (13) அவுட்டாக்கினார்.
நரைன் வீசிய 10 வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரிக்கிள்டன், பிரிமியர் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். வில் ஜாக்ஸ் 16 ரன் எடுத்தார். ரசல் வீசிய 13 வது ஓவரில் சூர்யகுமார், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, வெற்றி எளிதானது.
மும்பை அணி 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 121 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் (27), ரிக்கிள்டன் (62) அவுட்டாகாமல் இருந்தனர்.
8000 ரன்
நேற்று 27 ரன் எடுத்த சூர்யகுமார் (8007 ரன்), 'டி-20' போட்டியில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்தியர் ஆனார். முதல் நான்கு இடத்தில் கோலி (12,976), ரோகித் (11,851), தவான் (9797), ரெய்னா (8654) உள்ளனர்.
முதல் இந்தியர்
பஞ்சாப்பை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அஷ்வனி குமார் 23. பிரிமியர் தொடரில் நேற்று அறிமுகம் (மும்பை அணி) ஆனார். தனது முதல் பந்தில் ரஹானேவை அவுட்டாக்கினார்.
இதையடுத்து, பிரிமியர் அறிமுக போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய நான்காவது பவுலர் ஆனார். இதற்கு முன் அலி முர்டசா (2010), அல்ஜாரி ஜோசப் (2019), பிரிவிஸ் (2022) இதுபோல அசத்தினர்.
* தவிர, பிரிமியர் அரங்கில் அறிமுக போட்டியில் 4 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் அஷ்வனி குமார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் அல்சாரி ஜோசப் (6/12, மும்பை, 2019), ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை (5/17, குஜராத் லயன்ஸ், 2017), பாகிஸ்தானின் சோயப் அக்தர் (4/11, கோல்கட்டா, 2008), வெஸ்ட் இண்டீசின் கூப்பர் (4/26, ராஜஸ்தான், 2012) 4 அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்தனர்.
30 விக்கெட்
பிரிமியர் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் முதலிடத்தில் தொடர்கிறார் மும்பை அணியின் பவுல்ட் (96 போட்டி, 30 விக்.,). புவனேஷ்வர் குமார் (126ல் 27), பிரவீன் குமார் (89ல் 15), சந்தீப் சர்மா (78ல் 13), தீபக் சஹார் (77ல் 13) அடுத்தடுத்து உள்ளனர்.
மணிஷ் '18'
கோல்கட்டா அணியில் இடம் பெற்றிருந்த மணிஷ் பாண்டே, நேற்று 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கினார். தோனி, ரோகித், கோலிக்கு அடுத்து, பிரிமியர் அரங்கின் 18 சீசனிலும் பங்கேற்ற நான்காவது வீரர் ஆனார்.
10 முறை
பிரிமியர் அரங்கில் 10 வது முறையாக 120 ரன்னுக்குள் சுருண்டது கோல்கட்டா (116/10). மும்பைக்கு எதிராக 6வது முறையாக இதுபோல ஏமாற்றியது.

