/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ராஜஸ்தான் அணி மீது சூதாட்ட புகார்
/
ராஜஸ்தான் அணி மீது சூதாட்ட புகார்
ADDED : ஏப் 22, 2025 11:48 PM

ஜெய்ப்பூர்: பிரிமியர் கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட பிரச்னை கிளம்பியது. ராஜஸ்தான் அணி கடைசி இரு போட்டியில் வேண்டுமென்றே தோற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமியர் கிரிக்கெட்டின் 18 வது சீசன் தற்போது நடக்கிறது. ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டியில் 2 ல் மட்டும் வென்றது. 6 ல் தோற்று பட்டியலில் பின்தங்கியுள்ளது. டில்லிக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன் (இடம்: டில்லி) தேவைப்பட்டன. 8 ரன் மட்டும் எடுக்க, பின் நடந்த சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் தோற்றது.
அடுத்து லக்னோவுக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன் (ஜெய்ப்பூர்) தேவை என்ற நிலையில் 6 ரன் மட்டும் எடுத்து தோற்றது. இந்த இரு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 'பிக்சிங்' செய்ததாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் (ஆர்.சி.ஏ.,) தற்காலிக குழுவின் ஜெய்தீப் பிஹானி என்பவர் தெரிவித்துள்ளார்.
இதை மறுத்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், ஜெய்தீப் பிஹானி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர், விளையாட்டு அமைச்சர், செயலர், மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் எழுதிய கடிதம்:
ஆர்.சி.ஏ.,யின் சீனியர் உறுப்பினர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறு, இதை கடுமையாக எதிர்க்கிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டு அணியின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளை துாண்டுகின்றன. அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசிய ஜெய்தீப் பிஹானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரலாறு
கடந்த 2013ல் நடந்த 6வது பிரிமியர் தொடரில் சூதாட்டம் நடந்தது. இதில் சிக்கிய ராஜஸ்தான், சென்னை அணிகள் தலா 2 ஆண்டு தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டன. அணி உரிமையாளர்கள் 'பெட்டிங்' செய்ததாக செய்தி வெளியாகின. 'ஸ்பாட் பிக்சிங்' செய்ததாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் கைதாகினர். இவர்களுக்கு தடை விதிக்கப்பட, பின் விடுவிக்கப்பட்டனர்.